Published : 10 Nov 2018 01:41 PM
Last Updated : 10 Nov 2018 01:41 PM

6 நாட்களில் உயிரிழந்த 15 பச்சிளங் குழந்தைகள்: அசாம் மருத்துவமனையில் விசாரணைக்கு உத்தரவு

அசாமில் உள்ள ஜோர்ஹாத் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நவம்பர் 1 முதல் 6-ம் தேதி வரை 15 பச்சிளங் குழந்தைகள் உயிரிழந்துள்ளன. இதுதொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஜோர்ஹாத் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளர் சவுரவ் போர்ககோடி கூறும்போது, ''மருத்துவமனையில் உள்ள பிறந்த குழந்தைகளுக்கான சிறப்புப் பிரிவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. நவம்பர் 1 முதல் 6 வரை 15 பச்சிளங் குழந்தைகள் உயிரிழந்துள்ளன.

இதற்கு மருத்துவ உதவி மறுக்கப்பட்டதோ அல்லது மருத்துவமனை நிர்வாகமோ காரணமல்ல. சில நேரங்களில் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். அப்போது இறப்பு நேரிட்டால் அதன் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.

நோயாளிகள் என்ன மாதிரியான நிலையில் மருத்துவமனைக்கு வருகிறார்கள் என்பதைப் பொறுத்தே இது மாறுபடும். நீண்ட நேர பிரசவ வலி, பிறக்கும்போது குழந்தை எடை குறைவாக இருப்பது போன்ற காரணங்களால் பிறந்த குழந்தைகள் இறக்க வாய்ப்புண்டு.

இந்த மருத்துவமனை முழுமையான மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக மாற்றப்பட்ட பிறகு, இங்கே வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் வழக்கத்தை விட அதிகமாக குழந்தைகளை அனுமதிக்க வேண்டியுள்ளது.

எனினும் இறப்பு குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக ஆறு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது'' என்றார்.

அசாம் சுகாதாரத்துறை அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறும்போது, ''யுனிசெஃப் நடத்தி வரும் மருத்துவக் கல்வியக இயக்குநர், குவாஹாட்டி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர், அசாம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை மருத்துவர் ஆகியோர் அடங்கிய குழு, பச்சிளங் குழந்தைகளின் இறப்பு குறித்து விசாரித்து வருகிறது'' எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x