Published : 21 Nov 2018 02:53 PM
Last Updated : 21 Nov 2018 02:53 PM

30 ஆயிரம் விவசாயிகள் பேரணி: கடன் தள்ளுபடி கேட்டு தானேவிலிருந்து மும்பைக்கு நடைபயணம்

வறட்சி நிவாரணம், பழங்குடியினருக்கு நில உரிமை, வேளாண் கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 30 ஆயிரம் விவசாயிகள், பழங்குடி மக்கள் தானேவில் இருந்து மும்பை நோக்கி நடைபயணம் புறப்பட்டுள்ளனர்.

கடந்த 8 மாதங்களுக்கு முன் நாசிக் நகரில் இருந்து மும்பைக்கு இதுபோல் விவசாயிகள் நடைபயணம் புறப்பட்டுச் சென்று தலைநகர் மும்பையை அதிரவைத்தனர். அனைத்து இந்திய கிசான் சபா சார்பில் நடத்தப்பட்ட அந்தப் பேரணி நாசிக் முதல் மும்பை வரை 180 கி.மீ. நடைபயணமாக அமைந்திருந்தது. தற்போது 2-வது பயணத்தை விவசாயிகள் தொடங்கியுள்ளனர்.

இந்தியாவின் வாட்டர்மேன் என்று அழைக்கப்படுபவரும் மகசேசே விருது பெற்றவருமான டாக்டர் ராஜேந்திர சிங் இந்தப் பேரணியில் பங்கேற்றார். தானேவில் இருந்து சிவப்பு நிறக் கொடியுடன் புறப்பட்ட விவசாயிகள் இன்று நண்பகல் மும்பையில் உள்ள சோமையா மைதானத்தை அடைவார்கள். இன்று இரவு அங்கு தங்கிவிட்டு, நாளை காலை தெற்கு மும்பையில் உள்ள ஆசாத் மைதானம் நோக்கி பேரணியாகச் செல்ல உள்ளனர்.

இந்த மைதானத்துக்கு அருகேதான் மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை உள்ளது. இந்தப் பேரணியில் தானே, புவாசல், மாரத்வாடா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள், பழங்குடியினர் பங்கேற்றுள்ளனர்.

பேரணி குறித்து விவசாயிகள் தரப்பில் கூறுகையில், ''விவசாயிகளின் வேளாண் பொருட்களுக்கு உரிய விலையை நிர்ணயிக்க வரைமுறை நிர்ணயித்த எம்.எஸ். சுவாமிநாதன் பரிந்துரையை அமல்படுத்துதல், விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்துதல், விவசாயிகள் வங்கியில் பெற்றுள்ள பயிர்க்கடன்களைத் தள்ளுபடி செய்தல், வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு நிவாரணம் அளித்தல் போன்றவற்றை வலியுறுத்தி சட்டப்பேரவை கூடும்நேரத்தில் அரசுக்கு நினைவூட்ட பேரணியாக வந்துள்ளோம்'' எனத் தெரிவித்தனர்.

லோக் சங்கர்ஷ் மோர்ச்சா அமைப்பின் பொதுச்செயலாளர் பிரதிபா ஷின்டே கூறுகையில், “எங்களின் நீண்டகாலக் கோரிக்கையை நிறைவேற்றுங்கள் என்று அரசைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.ஆனால், அரசுத் தரப்பில் இருந்து பதில் இல்லை. அதனால், இந்தப் பேரணியையும், பொதுக்கூட்டத்தையும் நடத்தத் தள்ளப்பட்டோம்” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x