Published : 09 Nov 2018 02:59 PM
Last Updated : 09 Nov 2018 02:59 PM

சபரிமலை மகரவிளக்கு பூஜையைக் காண 550க்கும் மேற்பட்ட இளம் பெண்கள் ஆன்லைனில் முன்பதிவு

சபரிமலையில் ஆண்டுதோறும் நடைபெறும் மகரவிளக்குப் பூஜையை இந்த ஆண்டு காண்பதற்காக 550க்கும் மேற்பட்ட இளம் பெண்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு 10 வயது முதல் 50 வயது வரை உள்ள பெண்கள் செல்ல நூற்றாண்டுகளாகத் தடை இருந்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம் அனைத்து வயதுப் பெண்களும் சபரிமலைக்குச் சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கியது. இந்தத் தீர்ப்புக்கு எதிராக கேரள மாநிலம் முழுவதும் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாகத் தொடர் போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் நடந்து வந்தன.

சமீபத்தில் மாதாந்திர பூஜைக்காக சபரிமலை திறக்கப்பட்டபோது, அங்கு சாமி தரிசனத்துக்கு வந்த 50 வயதுக்குட்பட்ட பெண்களை போராட்டக்காரர்கள் திருப்பி அனுப்பியதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்தும் முயற்சியில் கேரள அரசு தீவிரமாக இறங்கியுள்ளது. பெண்களுக்கு முழுமையாகப் பாதுகாப்பு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

இந்நிலையில், சபரிமலையில் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து டிக்கெட் பெற்ற தரிசனம் செய்யும் வசதியைக் கடந்த மாதம் இறுதியில் கேரள அரசு அறிமுகம் செய்தது. Sabarimalaq.com என்ற இணையதள முகவரி மூலம் பக்தர்கள் முன்பதிவு செய்து டிக்கெட் பெற்று தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதன்படி, முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு சாமி தரிசனம் செய்யும் தேதி, நேரம் ஆகியவை ஒதுக்கீடு செய்யப்படும். மேலும் நிலக்கலில் இருந்து பல்வேறு நகரங்களுக்குச் செல்ல பஸ் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதியையும் இந்த இணையதளத்தில் அறிமுகம் செய்துள்ளது.

ஆன்லைனில் முன்பதிவு செய்யும்போது பக்தர்கள் தங்களின் புகைப்படம், முகவரி அடையாளச் சான்று, தனிப்பட்ட விவரங்கள், செல்போன் எண் ஆகியவற்றைத் தெரிவிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறு முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு சாமி தரிசனம் செய்யும் தேதி, நேரம் ஆகியவை ஒதுக்கப்பட்டு அனுமதிச் சீட்டு வழங்கப்படும்.

இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை வரை ஆன்லைன் மூலம் ஏறக்குறைய 3.50 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனத்துக்காக முன்பதிவு செய்துள்ளதாக போலீஸ் தகவல் நுட்பப் பிரிவு, போஸீஸ் டிஜிபிக்கு அளித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 550க்கும் மேற்பட்ட இளம் பெண்கள் மகரவிளக்கு பூஜையைக் காண்பதற்காக ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x