Last Updated : 23 Nov, 2018 03:53 PM

 

Published : 23 Nov 2018 03:53 PM
Last Updated : 23 Nov 2018 03:53 PM

‘‘காங்கிரஸ் கட்சியின் பிரித்தாளும் கொள்கையை மக்கள் புரிந்து கொண்டனர்’’ - பிரதமர் மோடி தாக்கு

மக்களைப் பிரித்து அதன் மூலம் ஆட்சி நடத்தும் காங்கிரஸ் கட்சியின் கொள்கையை மக்கள் புரிந்து கொண்டார்கள், அதனால்தான் காங்கிரஸ் 3 மாநிலங்களில் மட்டும் ஆளும் கட்சியாக சுருங்கிவிட்டது என்று பிரதமர் மோடி சாடினார்.

மிஸோரம் மாநிலத்தில் உள்ள 40 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வரும் 28-ம் தேதி தேர்தல் நடத்தப்பட உள்ளது. இங்கு நீண்டகாலமாக காங்கிரஸ் கட்சி ஆண்டு வருகிறது. அதிலும் வடகிழக்கு மாநிலங்களில் பெரும்பகுதியை ஆண்டு வந்த காங்கிரஸ் கட்சி தற்போது மிஸோரம் மாநிலத்தில் மட்டுமே ஆட்சியில் இருக்கிறது.

இந்நிலையில், அங்குள்ள லுங்லி நகரில் இன்று பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அங்குக் கூடியிருந்த மக்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசியதாவது:

வடகிழக்கு கலாச்சாரம் பாரம்பரியமானது, பழமையானது. ஆனால், அதை காங்கிரஸ் கட்சி மதிக்காமல் பழமையான பழக்கங்கள், வழக்கில் இல்லாதது என தூற்றும்போது, எனக்கு ஆழ்ந்த வேதனை அளிக்கிறது.

மக்களுக்கு இடையே பிரிவினையை ஏற்படுத்துதல், ஆட்சியைப் பிடித்தல் என்ற காங்கிரஸ் கட்சியின் கொள்கையை மக்கள் புரிந்துகொண்டார்கள். அதன் காரணமாகவே, அந்தக் கட்சி 3 மாநிலங்களில் மட்டுமே ஆட்சி செய்ய முடிகிறது.

ஒரு காலத்தில் காங்கிரஸ் கட்சி பெரும்பாலான மாநிலங்களில் ஆளும் கட்சியாக இருந்தது. ஆனால், இன்று மக்களால் நிராகரிக்கப்பட்டு 3 மாநிலங்களாகச் சுருங்கிவிட்டது. மிஸோரம் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை விரட்டுவதற்கு மக்களுக்குத் தங்கமான வாய்ப்பு கிடைத்துள்ளது.

காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை மிஸோரம் மக்களுக்கு முன்னுரிமை அளிக்கவில்லை. ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதே நோக்கமாகும். காங்கிரஸ் கட்சியின் ஒரு தலைவர் மிஸோரம் மக்களின் கலாச்சாரத் உடையை மிகவும் கிண்டல் செய்து, உதாசினப்படுத்திப் பேசியதை நினைத்து நான் மிகவும் ஆழ்ந்த வருத்தமும், வேதனையும் அடைந்தேன். பாரம்பரிய வடகிழக்கு உடைகளை, நவீன காலத்துக்கு தகுந்த உடையில்லை, வழக்கிழந்த ஆடை என்று அந்தத் தலைவர் பேசினார்.

கடந்த 4ஆண்டுகளாக மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான அரசு, இந்திய கலாச்சாரம், பாரம்பரியம் உலக அளவில் பெரிய அளவில் அங்கீகாரம் பெற உழைத்திருக்கிறது.

கிழக்கிந்திய மக்களுக்காகச் செயல்படு, வேகமாகச் செயல்படு என்ற கொள்கையில் கடந்த நான்கரை ஆண்டுகளாக பாஜக பணி செய்துள்ளது. வடகிழக்கின் ஒவ்வொரு மாநிலத்தையும் வளர்ச்சிக்கும் திட்டங்கள் வகுத்துள்ளது.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் பேசுகையில், பிரதமர் மோடி வழக்கில் இல்லாத வடகிழக்கு ஆடையை அடையையும், தலைப்பாகையும் அணிந்துள்ளார். ஒவ்வொரு நாட்டுக்கும், மாநிலத்துக்கும் செல்லும்போது அவர் அங்குள்ள ஆடைகளை அணிகிறார். ஆனால், முஸ்லிம்கள் தலையில் வைக்கும் குல்லாவை மட்டும் அணிவதில்லை எனக் கேட்டிருந்தார். இதைச்சுட்டிக்காட்டி பிரதமர் மோடி பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x