Last Updated : 07 Nov, 2018 07:49 PM

 

Published : 07 Nov 2018 07:49 PM
Last Updated : 07 Nov 2018 07:49 PM

சபரிமலைக்கு சாமி தரிசனம் செய்ய வந்த பெண் மீது தாக்குல் நடத்திய இளைஞர் கைது : 200 பேர் மீது வழக்குப்பதிவு

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த பெண் பக்தர் மீது தாக்குதல் நடத்திய 29 வயது இளைஞரை போலீஸார் இன்று கைது செய்தனர்.

சபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களும் சாமி தரிசனம் செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து மாநிலம் முழுவதும் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்தத் தீர்ப்பையடுத்து சபரிமலைக்குச் செல்லும் பெண்களில் 10 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் வந்தால் அவர்களைப் போராட்டக்காரர்கள் திருப்பி அனுப்பி வருவதால், அங்கு பதற்றமான சூழல் நிலவி வந்தது.

இந்நிலையில், தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு சபரிமலை நடை கடந்த இரு நாட்களுக்கு முன் திறக்கப்பட்டது. அப்போது சாமி தரிசனம் செய்ய 52 வயதான லலிதா ரவி என்ற பெண் பக்தர் வந்திருந்தார். தன்னுடைய ஒரு வயதுப் பேரனுக்கு முதல் முறையாக உணவு ஊட்டினார். ஆனால், இந்தப் பெண் 50 வயதுக்குட்பட்டவர் என நினைத்த அங்கிருந்த பக்தர்கள் கோஷமிட்டு, லலிதாவை மலை ஏறவிடாமல் தடுத்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டதால், போலீஸார் அங்குவந்து, போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, கூட்டத்தில் இருந்த ஒருவர் லலிதா மீது தாக்குதல் நடத்தினார்.

அதன்பின் அந்தப் பெண் தன்னிடம் இருந்த ஆதார் அட்டையைக் காண்பித்து தனக்கு 52 வயதாகிறது என்று கூறியவுடன் அங்கிருந்தவர்கள் மற்ற பெண்களுடன் சாமி தரிசனம் செய்ய அனுமதித்தனர். இந்நிலையில் லலிதா மீது இளைஞர் தாக்குதல் நடத்தியதைப் பார்த்த அங்கிருந்த போலீஸார், அந்த இளைஞரை அழைத்துச் சென்றனர்.

இந்நிலையில், உயரதிகாரிகள் உத்தரவின் பெயரில் அந்த இளைஞர் மீது வழக்குப்பதிவு செய்து போலீஸார் கைது செய்தனர். அந்த இளைஞர் பெயர் சூரஜ். பத்தினம்திட்டா மாவட்டம், எழந்தூரைச் சேர்ந்தவர் என்று விசாரணையில் தெரியவந்தது. இவர் மீது ஐபிசி 308 (தாக்குதல் முயற்சி), 354 (பெண்ணைத் தாக்குதல்) ஆகிய பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.சூரஜிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாக பத்தினம்திட்டா மாவட்ட போலீஸ் எஸ்பி நாராயண் தெரிவித்தார்.

மேலும், லலிதாவை மலை ஏறவும், இறங்கவும் தடுக்க முயற்சித்த அடையாளம் தெரியாத 200 பேர்மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x