Published : 28 Nov 2018 04:25 PM
Last Updated : 28 Nov 2018 04:25 PM

மனைவியை தவிக்கவிட்டால் பாஸ்போர்ட் ரத்து, போலீஸ் நடவடிக்கை, வேலையிழப்பு: ‘மனம்போல்’ வாழும் வெளிநாடு வாழ் இந்தியருக்கு எதிராக புதிய சட்டம்

மனைவியை இந்தியாவில் தவிக்கவிட்டு விட்டு வெளிநாடு தப்பிச் சென்று அங்கு மனம்போல் வாழும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் புதிய சட்டம் கொண்டு வரப்பட உள்ளது.

வெளிநாடுளில் வசிக்கும் இந்தியர்கள் பலர் இந்தியாவில் திருமணம் செய்துவிட்டு அவர்களை கைவிட்டுவிட்டு செல்லும் சம்பவங்கள் நீண்டகாலமாகவே நடந்து வருகின்றன. தெலங்கானா, ஆந்திரா, பஞ்சாப் மாநிலங்களில் இதுபோன்று வெளிநாடு வாழ் இந்தியர்களால் கைவிடப்படும் மனைவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் மனைவியை விட்டு விட்டு அவர்களை விவாகரத்து செய்யாமல் தாங்கள் வாழும் நாட்டில் வேறு பெண்ணுடன் அவர்கள் சேர்ந்து வாழ்கின்றனர். இந்த விவரம் தெரியாமல் கணவன் வந்து தன்னை அழைத்துச் செல்வார் என்ற நம்பிக்கையுடன் பல ஆண்டுகளை பெண்கள் கழித்துவிடும் சூழல் உள்ளது.

குறிப்பாக ஏழை மற்றும் கல்வியறிவற்ற நிலைமையை பயன்படுத்திக் கொண்டு பெண்களை திருமணம் செய்து வெளிநாடு வாழ் இந்தியர்கள் கைவிடும் சூழல் இருப்பதாக மத்திய குழந்தைகள் மற்றும் பெண்கள் அமைச்சகம் கூறி வருகிறது.

இதையடுத்து இந்த முறைகேடுகளை தடுக்க புதிய சட்டம் ஒன்றை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இதற்கான சட்டம் கொண்டு வரப்படும் என தெரிகிறது. இதுதொடர்பாக வெளியுறவு, உள்துறை, பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் ஆலோசனை நடத்தி வருகிறது.

இதுகுறித்து வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஹைதராபாத்தில் கூறியதாவது:

மனைவியை கைவிட்டுவிட்டு, வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களின் பாஸ்போர்ட் முடக்கப்படும். இதுபோன்ற புகாருக்கு ஆளாகுபவர்கள் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு வெளியுறவுத்துறை அமைச்சக இணையதளத்தில் தகவல் வெளியிடப்படும். அவர்கள் சார்ந்த மாநில போலஸாரால் நோட்டீஸ் வெளியிடப்பட்டு அதன் விவரம் அவர்கள் வசிக்கும் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்படும்.

இவை அனைத்தையும்விட, வெளிநாடு வாழ் இந்தியர்கள் வசிக்கும் நாட்டின் உள்ள இந்திய தூதரகம் மூலம் தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும். இந்திய தூதரகம் சார்பில் அந்த நாட்டு அதிகாரிகள், அவர்கள் பணிபுரியும் நிறுவனத்துடன் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கப்படும். இதன் மூலம் சம்பந்தப்பட்ட வெளிநாடு வாழ் இந்தியர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவற்றுக்கு வழிவகுக்கும் வகையில் புதிய சட்டத்தில் விதிமுறைகள் இடம் பெறும் .

இவ்வாறு அவர் கூறினார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x