Published : 08 Nov 2018 12:34 PM
Last Updated : 08 Nov 2018 12:34 PM

பணமதிப்பு நீக்கம் மிகப்பெரிய மோசடி, ஊழல்: மம்தா பானர்ஜி கடும் சாடல்

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு செயல்படுத்திய பணமதிப்பு நீக்கம் நாட்டை ஏமாற்றிய முறைகேடு, ஊழல் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார்.

பழைய 500 ரூபாய் மற்றும் 1,000 ரூபாய் நோட்டு செல்லாது என பிரதமர் மோடி 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி அறிவித்தார். இது, நாடுமுழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வங்கிகள், ஏடிஎம்களில் இருந்து பணம் எடுக்க முடியாமல் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அவதிக்குள்ளாகினர். அன்றாட செலவுக்கு கூட பணம் இல்லாமல் மக்கள் நெருக்கடியால் தவித்தனர்.

மதிப்பு நீக்கம் செய்ய ரூபாயை வங்கிகளில் மாற்ற 50 நாள் அவகாசம் தரப்பட்டது. அப்போது வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்ட பணம் கண்காணிக்கப்பட்டு, சந்தேகத்துக்கு இடமானவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

வருமான வரி சோதனைகள், போலி நிறுவனங்கள் மீது நடவடிக்கை என அடுத்தடுத்த அதிரடிகள் தொடர்ந்தன. இந்த நிலையில் பணமதிப்பு நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு இன்றுடன் 2 ஆண்டுகள் நிறைவடைகிறது.

இதுபற்றி மேற்குவங்க முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

‘‘இன்று மிக மோசமான கருப்பு தினம். பணமதிப்பு நீக்கம் என்பது மிகப்பெரிய மோசடி, ஊழல், நமது பொருளாதாரத்தை, பல கோடி மக்களின் வாழ்வாதாரத்தை அழித்தொழித்த நடவடிக்கை. இதை செய்தவர்களை மக்கள் உரியமுறையில் தண்டிப்பார்கள்.

பணமதிப்பு நீக்கத்தின் 2-ம் ஆண்டு நிறைவு தினம் என்பது கருப்பு நாள். இதை நான் மட்டும் கூறவில்லை. நாட்டின் மிகச்சிறந்த பொருளாதார மேதைகள் கூட இதை ஒப்புக் கொண்டுள்ளார்கள்’’ எனக் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x