Published : 27 Oct 2018 11:36 AM
Last Updated : 27 Oct 2018 11:36 AM

சபரிமலை உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு ஆதரவு தெரிவித்த கேரளா ஆசிரமத்துக்கு தீவைப்பால் பரபரப்பு: அக்கம்பக்க மக்களால் உயிர் பிழைத்த சாமியார்

சபரிமலையில் எந்த வயதுடைய பெண்களும் நுழையத் தடையில்லை என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பை ஆதரித்த ஆசிரமத்துக்கு தீவைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சுவாமி சந்தீபாநந்தா கிரி பகவத் கீதை பள்ளிக்குச் சொந்தமான இரண்டு கார்கள், ஒரு ஸ்கூட்டருக்கு தீ வைக்கப்பட்டதில் கருகி சாம்பலாயின. இன்று காலை திருவனந்தபுரம் புறநகர்ப்பகுதியில் உள்ள இந்த ஆசிரமத்திற்கு இன்று அதிகாலை 2.30 மணியளவில் தீவைக்கப்பட்டது.

உள்ளூர் ஊடகங்களின் தகவல்களின் படி வெள்ளை மாருதி சுசுகி ஆம்னி, ஹோண்டா சிஆர்வி கார்களுக்கு தீவைக்கப்பட்டது. இதுதொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருவதோடு, தீவைத்த விஷமிகளுக்கு வலைவிரித்துள்ளது.

இன்று காலை ஆசிரமத்துக்கு வருகை தந்த முதல்வர் பினராயி விஜயன்,  “கொள்கை ரீதியாக எதிர்கொள்ள முடியாத போது இது போன்ற வன்முறைச் சம்பவங்களைத்தான் கையிலெடுக்கின்றனர்.  சட்டத்தை தங்கள் கையில் எடுக்கும் எந்த ஒருவரையும் விட்டுவிட மாட்டோம். சுவாமிஜியின் நடவடிக்கைகள் மீது சகிப்புத்தன்மை இல்லாதவர்கள் ஆசிரமத்தைத் தாக்கியுள்ளனர்” என்றார்.

கேரளா நிதியமைச்சர் தாமஸ் ஐசக்  இது கொலை முயற்சி என்று குற்றம்சாட்டினார். “சுவாமி சந்தீபாநந்தா கிரி சங்பரிவாரத்தின் நிலைப்பாடுகளை மதிப்பு மிக்க முறையில் எதிர்த்து வந்தார்.  இவரையும் இன்னொருவரையும் தாக்குதல் நடத்தியுள்ளனர், ஆசிரமம் முழுதும் தீயில் கருகி விட வேண்டும் என்பதே நோக்கம். வெளியேயிருந்து மக்கள் தீவைப்புப் பற்றி சுவாமிஜிக்கு தெரியப்படுத்திய பிறகுதான் அவருக்குத் தெரிய வந்துள்ளது. ஆனால் தீயணைப்புப் படையினர் விரைவில் சம்பவ இடத்துக்கு வந்ததால் உயிர்ச்சேதம் இல்லை.  உண்மையான பக்தர்களையும் கூட இவர்கள் இப்படித்தான் தாக்குவார்கள்” என்று கூறினார்.

அனைத்து பெண்களும் சபரிமலைக்கு வரலாம் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பை ஆதரித்த சந்தீபாநந்தா கிரிக்கு பெரிய அச்சுறுத்தல்களெல்லாம் இருந்து வந்தன.  கொலை மிரட்டல்களும் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x