Published : 13 Oct 2018 01:26 PM
Last Updated : 13 Oct 2018 01:26 PM

காய்கறிகளையே சாப்பிடச் சொல்கிறீர்களா? - இறைச்சிக்கு தடைகோரும் வழக்கில் உச்ச நீதிமன்றம் கேள்வி

மக்கள் அனைவரும் சைவமாக வேண்டுமென்பதுதான் உங்கள் விருப்பமா? அவர்களை காய்கறிகளையே சாப்பிடச் சொல்கிறீர்களா என்று இறைச்சிக்கு தடை கோரும் மனுவை விசாரித்த நீதிபதிகள் கேள்வியெழுப்பினர்.

இறைச்சி வர்த்தகம் மற்றும் தோல் தொழில் மீதான தடை விதிக்கக் கோரும் பொதுநல வழக்கு ஒன்று உச்ச நீதிமன்றத்திற்கு நேற்று வந்தது,

இம்மனுவை தாக்கல் செய்த, 'ஆரோக்கிய செல்வம் நன்னெறி உலக வழிகாட்டி இந்தியா அறக்கட்டளை' (ஹெல்தி வெல்தி எதிகல் வேர்ல்டு இந்தியா டிரஸ்ட்) என்ற அமைப்பு, 

அரசு அல்லது தனியார் நிறுவனங்கள் மாடு, மீன், பன்றி, கோழி உள்ளிட்ட அனைத்து வகையான இசைச்சிகள் மற்றும் இறைச்சி தொடர்பான உற்பத்திப் பொருட்கள் ஏற்றுமதி செய்வதற்கும் தடைவிதிக்க வேண்டுமென தமது மனுவில் கோரியிருந்தது.

நேற்று விசாரணைக்கு வந்த இவ்வழக்கை, மதன் பி. லோகூர் மற்றும் தீபக் குப்தா அடங்கிய அமர்வு விசாரித்தது.

விசாரணையின்போது பேசிய மனுதாரரின் வழக்கறிஞர், ''இறைச்சி ஏற்றுமதி மற்றும் அதன் துணைத் தொழிலான தோல் வர்த்தகம் இரண்டுமே சமூக விரோதம் மற்றும் காண்டுமிராண்டித்தன மானதாகும். ஆனால் அந்நிய செலாவணி பற்றி பேசும்போது நாட்டின் செலவில், இதற்கு மிகப்பெரிய விலை கிடைக்கிறது என்று பேசுகிறோம்.

உலகம் முழுவதும் உள்ள இறைச்சிக்காக ஆடுமாடுகள் கொல்லப்படும் கூடங்களும் தோல் பதனிடுதலும் சமூகத்திற்கு எதிரான, அருவறுப்பான மற்றும் அபாயகரமான குற்றமாகும். மேலும் இந்த அருவறுப்பான தொழிலில் இருந்து வெளிவரும் பரவலான மாசுபாடு பற்றி இறைச்சி ஏற்றுமதியாளர்கள் பேசுவதில்லை'' என்று தெரிவித்தார்.

விசாரணை ஒத்திவைப்பு

அப்போது குறுக்கிட்ட நீதிபதி மதன் லோகூர் ''ஆக, நாடு முழுக்க முழுக்க காய்கறிகளை மட்டுமே சாப்பிட்டு சைவமாக இருக்க வேண்டுமென்று நீங்கள் விரும்புகிறீர்களா?'' என்று நீதிபதி லோகூர் கேட்டதில், மனுவை தள்ளுபடி செய்வதற்கான வாய்ப்பு இருப்பதாகவே தோன்றியது.

எனினும், மனுதாரரின் வழக்கறிஞர் ''தனது வாதங்களை முன்வைக்க வாய்ப்பளிக்க வேண்டும்'' என்று  விடுத்த வேண்டுகோளுக்கு ஒப்புதல் அளித்தார். மேலும் பூஜா விடுமுறை தினங்களுக்குப் பின்னர் இம்மனுவை விசாரிக்க நீதிபதிகள் ஒப்புதல் அளித்தனர்.

பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள இவ்வழக்கில் உள்நாட்டு தனியார் இறைச்சி உற்பத்தியை இந்த அறக்கட்டளை குறிப்பாக எதிர்க்கவில்லை, இதில் மனுதாரர் வலியுறுத்தி கூறியுள்ளது என்னவென்றால், ''தீவிரமான விலங்கின இறைச்சித் தொழிலில் பெருமளவில் ஆண்ட்டிபயாடிக் எனப்படும் நோய்எதிர்ப்புச் சக்தி மருந்துகள் தவறாகவே பயன்படுத்தப்படுகின்றன. இதனால் பரவும் வெப்ப நோய்கள் பொதுமக்களை அதிக அளவில் பாதிக்கிறது,'' என்பதுதான்.

இறைச்சி வர்த்தகம் மற்றும் தோல் தொழிற்சாலைகள் பொது சுகாதாரத்தை தீவிரமாக பாதிக்கின்றன, இத்தொழில்களை மேலும் அனுமதித்தால் நமது கால்நடை செல்வங்கள் நாளுக்குநாள் குறைவது ஒருபக்கம், இன்னொரு பக்கம் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் குடிநீரில் மாசு கலப்படம் ஏற்படுவது மற்றும் சுற்றுச்சூழல் சீரழிவதும் தொடர்ந்து நடைபெறும் என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x