Published : 12 Oct 2018 08:32 AM
Last Updated : 12 Oct 2018 08:32 AM

இரு கொலை வழக்குகளில் சாமியார் ராம்பால் குற்றவாளி: ஹரியாணா நீதிமன்றம் தீர்ப்பு

சாமியார் ராம்பால் மற்றும் அவரது சீடர்கள் 26 பேர் இரண்டு கொலை வழக்குகளில் குற்றவாளிகள் என்று ஹரியாணா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஹரியாணா மாநிலம் ஹிசார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சாமியார் ராம்பால். டெல்லி மித்தாபூரைச் சேர்ந்த ஷிவ்பால் என்பவர் தனது மனைவியை ராம்பால் தனது ஆசிரமத்தில் அடைத்து வைத்து பின்னர் கொன்றதாக கடந்த 2014-ம் ஆண்டு நவம்பர் மாதம் ஹரியாணா போலீஸில் புகார் அளித்தார்.

இதேபோன்ற புகாரை உ..பி.யின் லலித்பூரைச் சேர்ந்த சுரேஷ் என்பவரும் ராம்பால் மீது கூறினார். இந்த இரண்டு கொலைகள் தொடர்பாக ராம்பால் மற்றும் அவரது சீடர்கள் 26 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. அப்போது, ராம்பாலை கைது செய்ய போலீஸார் சென்றபோது அவரது ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர்.

இதில் 5 பெண்கள் ஒரு குழந்தை உட்பட 6 பேர் இறந்தனர்.

இதனிடையே, 4 ஆண்டுகளாக நடந்து வந்த இரண்டு கொலைகள் தொடர்பான வழக்குகளில் ராம்பால் மற்றும் அவரது சீடர்கள் 26 பேர் குற்றவாளிகள் என்று ஹரியாணாவின் ஹிசார் மாவட்ட நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. குற்றவாளிகளுக்கு தண்டனை விவரம் வரும் 16 மற்றும் 17-ம் தேதி அறிவிக்கப்படுகிறது. ராம்பாலின் ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபடாமல் இருக்கவும் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும் ஹிசாரில் கூடுதல் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x