Published : 24 Oct 2018 09:18 AM
Last Updated : 24 Oct 2018 09:18 AM

காஷ்மீர் சமூக ஆர்வலர் மீது பாலியல் புகார்

கதுவா பலாத்கார சம்பவத்தை வெளிச்சத்துக்கு கொண்டுவந்த சமூக ஆர்வலர் தலிப் ஹுசைன் மீது பாலியல் புகார் எழுந்துள்ளது.

காஷ்மீர் மாநிலம் கதுவா பகுதியில் கடந்த ஜனவரியில், எட்டு வயது சிறுமி ஒரு கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூர மாக கொலை செய்யப்பட்டார். காஷ்மீர் சமூக ஆர்வலர் தலிப் ஹுசைனின் தொடர் போராட்டங் களால் கதுவா பலாத்காரம் கடந்த ஏப்ரலில் வெளிச்சத்துக்கு வந்தது.

இதனிடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழும் தலிப் ஹுசைனின் மனைவி, கடந்த ஜூனில் கணவர் மீது வரதட்சணை புகார் அளித்தார். கடந்த ஜூலையில் மைத்துனி, அவர் மீது பலாத்கார புகார் அளித்தார். அந்த வழக்கில் தலிப் ஹுசைன் கைது செய்யப்பட்டார்.

கதுவா சம்பவத்தின் எதிரொலி யாக அவர் மீது பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் சிறையில் அவர் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர் பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தலிப் ஹுசைனுக்காக மூத்த பெண் வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் உச்ச நீதிமன்றத்தில் வாதாடினார்.

இந்தப் பின்னணியில் ‘மீ டூ' இயக்கத்தில் டெல்லி ஜவஹர்லால் நேரு (ஜேஎன்யூ) பல்கலைக்கழக மாணவி ஒருவர், மின்னணு ஊடகம் வாயிலாக தலிப் ஹுசைன் மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது: கதுவா சம்பவத்தின் மூலம் புகழ் பெற்ற ஜம்முவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் (தலிப் ஹுசைன்), கடந்த ஏப்ரலில் ஜேஎன்யூ நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது என்னிடம் நெருங்கிப் பேசிய அவர், எனது குடும்பம், படிப்பு, அரசியல் நம்பிக்கை குறித்து விசாரித்தார். மீண்டும் அவர் பல்கலைக்கழகத்துக்கு வந்தபோது, என்னை திருமணம் செய்துகொள்ள சம்மதமா என்று கேட்டார். அப்போதே அவரை கடுமையாகக் கண்டித்தேன்.

கடந்த ஏப்ரல் 27-ம் தேதி டெல்லிக்கு வந்திருப்பதாகவும், தன்னைச் சந்திக்க வரும்படியும் ‘மெசேஜ்' அனுப்பினார். நான், அவரை சந்திக்க செல்லவில்லை.

அன்றிரவு 40 முறைக்கும் மேல் செல்போனில் அழைப்புகள் வந்தன. அடுத்த நாள் காலையில் அதனை கவனித்தேன். தொந்தரவு தாளாமல் அவரை சந்திக்கச் சென்றேன். என்னை காரில் பாட்லா ஹவுஸ் பகுதியில் உள்ள குடியிருப்புக்கு அழைத்துச் சென்றார். அங்குள்ள ஒரு வீட்டில் என்னை வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்தார். ஜேஎன்யூ நண்பர்களிடம் கூறிவிடுவேன் என்று மிரட்டினேன். உடல்ரீதியாக போராடினேன். எவ்வளவோ முயன்றும் அவரிடமிருந்து தப்ப முடியவில்லை. அன்றைய அழுகையை, வலியை எப்போதுமே என்னால் மறக்க முடியாது. கடைசியாக என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி, தனது கொடூர செயலுக்கு நியாயம் கற்பித்தார்.

இவ்வாறு அந்த பெண் தனது வேதனையை விவரித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் கட்டுரையை படித்த மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங், ‘‘இனிமேல் தலிப் ஹுசைனுக்காக எந்தவொரு நீதிமன்றத்திலும் ஆஜராக மாட்டேன்’’ என்று பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x