Published : 31 Oct 2018 03:27 PM
Last Updated : 31 Oct 2018 03:27 PM

சர்தார் படேல் கட்டியெழுப்பிய தேசத்தை சிதைப்பது துரோகம்: பாஜக மீது ராகுல் மறைமுக தாக்கு

நாட்டின் முதல் துணைப் பிரதமர் சர்தார் வல்லபாய் படேலின் மிக உயர்ந்த சிலையை பிரதமர் மோடி இன்று திறந்துள்ள நிலையில், படேல் கட்டியெழுப்பிய தேசத்தின் நிறுவனங்களை சிதைக்கும் செயல், அவருக்கு செய்யும் துரோகம் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

சுதந்தரமடைந்த இந்தியாவுடன், பிரிந்து கிடந்த சமஸ்தானங்களை இணைத்து இந்தியாவின் இரும்பு மனிதர் என பெயர் பெற்றவர் சர்தார் வல்லபாய் படேல். இந்தியாவின் பிஸ்மார்க் என அழைக்கப்பட்ட வல்லபாய் படேலுக்கு மிக உயர்ந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது.

நர்மதா ஆற்றின் சர்தார் சரோவர் அணைக்கருகே, ஆற்றுத் தீவான சாதுபேட் என்ற இடத்தில் இந்தச் சிலை நிறுவப்பட்டுள்ளது. 182 மீட்டர் உயரம் கொண்ட இந்த சிலை, அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலை, சீனாவின் புத்தர் சிலையை விடவும் உயரம் கொண்டது.

குஜராத் முதல்வராக மோடி பதவி வகித்தபோது, 2013-ம் ஆண்டு இந்த சிலை அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்காக சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. சிலை அமைக்கும் பணி முடிந்த நிலையில், அதனை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.

சர்தார் படேல் சிலை குறித்து பல்வேறு தரப்பினரும் கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர். இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியதாவது:

‘‘சர்தார் படேல் மிகச்சிறந்த தேச பக்தர். சுதந்திரப் போராட்ட தியாகி. நாட்டை ஒற்றுமை படுத்தி, சமஸ்தானங்களை இணைத்ததால் அவர் இரும்பு மனிதர் என புகழப்படுகிறார். மதச்சார்பற்ற இந்தியாவை உருவாக்கியதில் படேலின் பங்கு மகத்தானது. மதவாதத்தை சகித்துக் கொள்ளாதவர். இந்திய நிறுவனங்களை கட்டி எழுப்பியவர். அந்த நிறுவனங்களை சிலர் அழிக்க முயல்வது அவருக்கு செய்யும் துரோகம்’’ எனக் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x