Published : 31 Oct 2018 05:56 PM
Last Updated : 31 Oct 2018 05:56 PM

தீபாவளிக்கு தயாரான குடும்பம் இறுதிச் சடங்கை நிறைவேற்ற வேண்டிவந்த சோகம்

ஹேப்பி ஃபேமிலி - இது தூர்தர்ஷன் ஒளிப்பதிவாளர் அச்சுதானந்த சாஹுவின் வீட்டில் மனைவி ஹிமான்சலி சுவரில் மாட்டி வைத்திருந்த வாசகம். இது இப்போது வெறும் நினைவுகளாக மாறிவிட்டது.

என்ன நடந்தது?

சத்தீஸ்கர் சட்டப்பேரவைக்கு நவம்பர் 12 முதல் இரண்டு கட்டத் தேர்தல் நடைபெற உள்ளது. நக்சலைட்டுகள்  நடமாட்டம் அதிகம் உள்ள இந்த மாநிலத்தின் தாண்டேவாடே மாவட்டத்தில் தூர்தர்ஷன் தொலைக்காட்சி செய்திக்குழுவினர் பணியில் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் பாதுகாப்பிற்கு மத்திய பாதுகாப்பு படையான சிஆர்பிஎப் காவலர்களும் இருந்த நிலையில் அவர்கள் மீது நக்சல் தாக்குதல் நடைபெற்றது. இதில் தூர்தர்ஷன் தொலைக்காட்சி கேமராமேன் அச்சுதானந்த் சாஹு (34) பரிதாபமாக பலியானார்.

இதுகுறித்து வேதனையுடன் பகிர்கிறார் சாஹூவின் பக்கத்து வீட்டுக்காரர் பர்வீன் மோர்.

''டிவி செய்திகள் மூலமே தன் கணவரின் இறப்பு ஹிமான்சலிக்குத் தெரிய வந்தது. அவரால் பேசக் கூட முடியவில்லை. அச்சுதானந்த சாஹுவின் பெற்றோர் செவ்வாய்க்கிழமை அன்று டெல்லிக்கு ரயிலில் வந்துகொண்டிருந்தனர். தன் மகன் மற்றும் மருமகளுடன் தீபாவளியைக் கொண்டாடுவதாகத் திட்டம்.

எதிர்பாராத விதமாகத் தெரிந்த மகனின் இறப்புச் செய்தியால் பாதி வழியிலேயே இறங்கிவிட்டனர். இறுதிச் சடங்குகளுக்காக வேதனையுடன் தங்களின் சொந்த ஊர் திரும்பினர். சத்தீஸ்கரின் எல்லையில் ஒடிசா மாநிலத்தில் அமைந்துள்ள பொளங்கீர் மாவட்டத்தின் குசுரிமுண்டா கிராமத்தைச் சேர்ந்தவர் அச்சுதானந்த் சாஹு.

சில மாதங்களுக்கு முன்னர்தான் வேலை விஷயமாக சொந்த ஊர் சென்றார் அச்சுதானந்த சாஹு. டெல்லியில் அவருக்கு உறவினர்கள் இல்லாததால், சாஹுவின் உடல் அவரின் சொந்த ஊருக்கே எடுத்துச் செல்லப்பட உள்ளது'' என்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x