Published : 21 Oct 2018 08:39 AM
Last Updated : 21 Oct 2018 08:39 AM

‘மீ டு’ இயக்கத்தை தவறாக பயன்படுத்தக்கூடாது: பம்பாய் உயர் நீதிமன்றம் எச்சரிக்கை

‘மீ டு’ இயக்கத்தை தவறாக பயன்படுத்தக்கூடாது என்று பம்பாய் உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பாலிவுட் திரையுலகில் பிரபல தயாரிப்பாளராக இருப்பவர் விகாஸ் பஹல். இவர் மீது ஒரு பெண் பாலியல் குற்றச்சாட்டைத் தெரிவித்தார். அந்தப் பெண் பாண்டம் பிலிம்ஸ் என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தைச் சேர்ந்த முன்னாள் ஊழியர் ஆவார்.

குயின் இந்திப் பட ஷூட்டிங்கின்போது தனக்கு விகாஸ் பஹல் பாலியல் தொந்தரவு கொடுத்தார் என்றும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றும் அந்தப் பெண் புகார் தெரிவித்திருந்தார். இதை குயின் பட நடிகை கங்கனா ரணவத்தும் ஆதரித்து, அந்தப் பெண்ணுக்குத் துணை நின்றார்.

இந்த நிலையில் பம்பாய் உயர் நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கை விகாஸ் பஹல் தொடர்ந்தார். அந்தப் பெண் தெரிவித்த பாலியல் புகாரால் தனக்கு புகழுக்கு களங்கம் ஏற்பட்டுவிட்டது என்று வழக்கில் அவர் தெரிவித்தார், படத் தயாரிப்பு நிறுவனமான பாண்டம் பிலிம்ஸ், திரைப்பட இயக்குநர்கள் அனுராக் காஷ்யப், விக்கிரமாதித்யா மோத்வானே ஆகியோர் தனக்கு ரூ.10 கோடியை நஷ்டஈடாகத் தரவேண்டும் என்றும் அவர் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் இந்த வழக்கு நேற்று முன்தினம் பம்பாய் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை நீதிபதி எஸ்.ஜே.கதவாலா விசாரித்தார். அப்போது அந்தப் பெண்ணின் தரப்பில் மூத்த வழக்கறிஞர் நவ்ரோஸ் சேர்வாய் ஆஜரானார். அப்போது சேர்வாய் கூறும்போது, “பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு, விகாஸ் பஹல் தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வருகிறார். எனவே அவர் இந்த வழக்கில் ஒரு வாதியாக இருக்க விரும்பவில்லை” என்றார். இதையடுத்து இதை எழுத்துபூர்வ ஆவணமாக தாக்கல் செய்யுமாறு சேர்வாய்க்கு நீதிபதி உத்தரவிட்டார்.

பின்னர் நீதிபதி கூறும்போது, “தொடர்ந்து இந்த வழக்கை நடத்த அந்த பெண் விரும்ப வில்லையென்றால் வேறு யாரும் இதைப்பற்றி பேசமாட்டார்கள். அந்த பெண்ணுக்குப் பதிலாக வேறு யாரும் வழக்கு தொடர முடியாது. அவரது சார்பில் யாரும் இந்த வழக்கை நடத்தக்கூடாது.

பாதிக்கப்பட்ட பெண்கள் முன்வந்து புகார் தருவதற்காக ‘மீ டு’ இயக்கம் உள்ளது. ‘மீ டு’ இயக்கத்தை தவறாகப் பயன்படுத்தக்கூடாது” என்றார்.

விகாஸ் பஹல் சார்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடையவற்றை நீதி மன்றத்தில் வெளியே தீர்த்துக் கொள்ளமுடியுமா என்பதை பரிசீலிக்கலாம் என்றும் நீதிபதி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x