Published : 19 Oct 2018 11:59 AM
Last Updated : 19 Oct 2018 11:59 AM

சபரிமலை ஐயப்பன் கோயிலைப் பூட்டி சாவியை ஒப்படைக்க முடிவு: தலைமை அர்ச்சகர் அறிவிப்பு

சபரிமலை ஐயப்பன் கோயிலைப் பூட்டி சாவியை ஒப்படைக்க முடிவு செய்துள்ளதாகத் தலைமை அர்ச்சகர் கண்டரரு ராஜீவரு தெரிவித்துள்ளார்.

கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் செல்ல தடை இருந்த நிலையில் உச்ச நீதிமன்றம், அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் எனத் தீர்ப்பளித்தது. இதை அமல்படுத்தப் போவதாக அறிவித்த கேரள கம்யூனிஸ்ட் அரசு, ஐப்பசி மாத பூஜைக்காக கோயில் நடை திறக்கும்போது பெண்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவித்தது.

ஆனால், தீர்ப்பை எதிர்த்து ஐயப்ப பக்தர்கள், பந்தளம் அரச குடும்பத்தினர், கோயில் தந்திரிகள், இந்து அமைப்புகள் மற்றும் பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். பெண்கள் வந்தால் அவர்களைத் தடுத்து நிறுத்துவோம் எனப் போராட்டக்காரர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

ஐப்பசி மாத பூஜைக்காக நேற்று முன் தினம் (புதன்கிழமை) மாலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது. நேற்று (வியாழக்கிழமை) சபரிமலைக்கான நுழைவு வாயிலாகக் கருதப்படும் நிலக்கல் பகுதியில் திரளாக நின்ற ஐயப்ப பக்தர்கள் சபரிமலை நோக்கி வந்த வாகனங்களை சோதனை செய்து, அதில் இளம் பெண்கள் இல்லை என உறுதிப்படுத்திய பின்னரே உள்ளே அனுமதித்தனர்.

அதேபோல இன்றும் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. சன்னிதானத்தை நெருங்கிய இரண்டு பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து ஐயப்ப பக்தர்கள் சன்னிதானம் அருகே சரணகோஷம் எழுப்பினர். 18-ம் படியின் கீழ் அர்ச்சகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அவர்கள் பம்பைக்குத் திருப்பி அனுப்பப்பட்டனர்.

இதுதொடர்பாகப் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் சபரிமலை ஐயப்பன் கோயிலைப் பூட்டி சாவியை ஒப்படைக்க முடிவு செய்துள்ளதாகத் தலைமை அர்ச்சகர் கண்டரரு ராஜீவரு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்துப் பேசிய அவர், ''கோயிலைப் பூட்டி, சாவியை ஒப்படைத்து விட்டுச் செல்ல முடிவு செய்துள்ளோம். ஐயப்ப பக்தர்களுக்கு ஆதரவாக இருப்பதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை'' என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x