Last Updated : 01 Oct, 2018 08:55 PM

 

Published : 01 Oct 2018 08:55 PM
Last Updated : 01 Oct 2018 08:55 PM

புல்லட் ரயிலுக்கு வலுக்கும் எதிர்ப்பு: ஜப்பான் பிரதமரை சந்திக்க ஆயத்தமாகும் குஜராத் விவசாயிகள்

பிரதமர் மோடியின் கனவுத் திட்டமான புல்லட் ரயிலுக்கு நிலம் கையகப்படுத்துவதுக்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ள நிலையில், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேயை சந்திக்க குஜராத் விவசாயிகள் தயாராகியுள்ளனர்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து மும்பைக்கு புல்லட் ரயில் இயக்குவது பிரதமர் மோடியின் கனவுத் திட்டமாகும். இந்தத் திட்டத்தின் மதிப்பு ரூ.ஒரு லட்சம் கோடியாகும்.

இந்தத் திட்டத்துக்கான அடிக்கல் நாட்டுவிழா கடந்த மே மாதம் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, பிரதமர் மோடி தலைமையில் நடந்தது. ஜப்பான் நாட்டின் நிதி உதவியுடன் தயாராகும் இந்தத் திட்டம் 2023-ம் ஆண்டு நடைமுறைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்துக்காக ரூ.88 ஆயிரம் கோடியை ஜப்பான் அரசு கடனாக வழங்க உள்ளது.

இந்தத் திட்டத்தின் தொடக்கக் கட்டமான நிலம் கையகப்படுத்துவதிலேயே பல சிக்கல்கள் எழுந்தன. இரு மாநிலங்களிலும் உள்ள விவசாயிகள் நிலம் கையகப்படுத்துவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். சமீபத்தில் ஆயிரம் விவசாயிகள் அகமதாபாத் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.

இந்தத் திட்டத்துக்காக ஜப்பான் சர்வதேச கூட்டுறவு ஏஜென்சி(ஜேஐசிஏ) விவசாயிகளிடம் இருந்து நிலத்தைக் கையகப்படுத்தும் முறை சட்டத்துக்கு உட்பட்டு இல்லை, தீவிரமான விதி முறைகேடுகளில் ஈடுபடுகிறது என்று விவசாயிகள் தரப்பில் குற்றம்சாட்டப்படுகிறது.

இந்நிலையில், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, ஜப்பான் எதிர்க்கட்சித் தலைவர் யோகியோ எடானா ஆகியோரைச் சந்தித்து, புல்லட் ரயில் திட்டத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து எடுத்துக்கூற விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.

இது குறித்து விவசாயிகள் தரப்பில் அகமதாபாத் உயர் நீதிமன்றத்தில் வாதாடிவரும் வழக்கறிஞர் ஆனந்த் யாக்னிக் கூறுகையில், “ விவசாயிகள் உள்பட நாங்கள் அனைவரும் ஜப்பான் செல்ல திட்டமிட்டுள்ளோம். ஜப்பானில் உள்ள டோக்கியோ, ஒசாகா, ஹிரோஷிமா, நாகசாமி ஆகிய நகரங்களில் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி ஜப்பான்-இந்தியா கூட்டு முயற்சியில் உருவாக உள்ள புல்லட் ரயில் குறித்து பேச இருக்கிறோம்.

இந்தத் திட்டத்துக்காக விவசாயிகளிடம் இருந்து சட்டவிரோதமாக ஜப்பான் நிறுவனம் நிலத்தைக் கையகப்படுத்த எடுத்துவரும் நடவடிக்கைகளையும் தெரிவிப்போம். இதனால் விவசாயிகளும், விவசாயமும் அடையும் பாதிப்பையும் விளக்குவோம். ஒட்டுமொத்தமாக ஜப்பான் நிறுவனம் சமூக, சுற்றுச்சூழல் வழிகாட்டி முறைகளை மீறி நடக்கிறது.

இது தொடர்பாக ஜப்பான் பிரதமர், எதிர்க்கட்சித் தலைவரைச் சந்திக்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம்” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x