Last Updated : 17 Aug, 2018 11:01 AM

 

Published : 17 Aug 2018 11:01 AM
Last Updated : 17 Aug 2018 11:01 AM

7 நாட்களுக்கு அனைத்தும் இலவசம்:கேரளாவுக்குத் தோள் கொடுத்த தொலைத்தொடர்பு நிறுவனங்கள்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்துக்கு உதவும் வகையில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அடுத்த 7 நாட்களுக்கு அனைத்து அழைப்புகள், டேட்டாக்களை இலவசமாகப் பயன்படுத்திக்கொள்ள மக்களை அனுமதித்துள்ளன

அதேபோல போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்கள் பில்கட்டணத்தை தாமதமாகச் செலுத்தவும் அனுமதிக்கப்பட்டுள்ளன.

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கேரள மாநிலத்தில் கடந்த 8 நாட்களுக்கும் மேலாகப் பெருமழை பெய்து வருகிறது. இதுவரை மழைவெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 100-க்கும் மேற்பட்டர் பலியாகியுள்ளனர், 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வீடுகள், உடைமைகளை இழந்து அரசின் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 14-க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் வெள்ள நீரில் பாதிக்கப்பட்டுள்ளன.

மாநிலத்தில் உள்ள 39 அணைகளில் 35 அணைகள் நிரம்பித் திறந்துவிடப்பட்டுள்ளதால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மாநிலத்தின் பெரும்பகுதி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கேரள மக்களுக்கு உதவும் வகையில், மாநிலத்தில் உள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அடுத்த 7 நாட்களுக்கு இலவச கால்கள், டேட்டாகளை பயன்படுத்திக்கொள்ள மக்களுக்கு அனுமதித்துள்ளன.

அரசு நிறுவனமான பிஎஸ்என்எல், ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடபோன், ஐடியா செல்லுலார் ஆகிய நிறுவனங்கள் இலவச சேவையை அறிவித்துள்ளன.

இந்த 5 தொலைத்தொடர்பு நிறுவனங்களும் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு 7 நாட்களுக்குக் குறிப்பிட்ட அளவுக்குப் பேசிக்கொள்ள அனுமதித்துள்ளன. அதேபோல போஸ்ட் பெய்ட் வாடிக்கையாளர்கள் தங்களின் பில்கட்டணத்தை தாமதமாகச் செலுத்திக்கொள்ள அனுமதித்துள்ளன. மேலும், அடுத்த 7 நாட்களுக்கு ஒவ்வொரு ப்ரீபெய்ட் வாடிக்கையாளருக்கும் ஒரு ஜிபி நாள்தோறும் இலவசமாக வழங்கப்படும் என்றும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

இது குறித்து ஜியோ நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், “ கேரள மக்களின் இந்தத் துரதிருஷ்டமான நேரத்தில் அவர்களுக்குத் துணையாக இருப்போம். மக்கள் தங்களின் உறவினர்களோடும், நண்பர்களோடும் தொடர்பில் இருக்கவும், நலத்தையும், பாதுகாப்பையும் உறுதி செய்து கொள்ளவும் நாங்கள் உதவுகிறோம். இதன்படி ஜியோ வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் அடுத்த 7 நாட்களுக்கு வாய்ஸ் கால் மற்றும் டேட்டா அனைத்தும் இலவசமாக அளிக்கப்படுகிறது. எவ்வளவு வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிஎஸ்என்ல் நிறுவனத்தின் மேலான் இயக்குநர் அனுபம் சிறீவஸ்தவா கூறுகையில், கேரள வாடிக்கையாளர்களுக்கு உறுதுணையாக இந்த நேரத்தில் இருப்போம். அடுத்த 7 நாட்களுக்கு கேரளாவில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள மக்கள் இலவசமாக டேட்டாக்களையும், டேட்டா கால்களையும் எவ்வளவு வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும், நாள்தோறும் 20 நிமிடங்கள் எந்த நிறுவனத்துக்கும் இலவசமாக அழைப்பு செய்யலாம்” எனத் தெரிவித்துள்ளார்.

இதேபோல ஏர்டெல், வோடபோன் நிறுவனம் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு நாள்தோறும் ரூ.30 மதிப்புள்ள இலவச டாக்டைம் அளிக்கிறது. அதேபோல, ஐடியா வாடிக்கையாளர்கள் ரூ.10 மதிப்புள்ள டாக்டைம் இலவசமாக நாள்தோறும் பெறலாம்.

மேலும், திருச்சூர், கள்ளிக்கோட்டை, மலப்புரம், கண்ணூர், கோட்டயம் ஆகிய பகுதிகளில் வசிக்கும் வாடிக்கையாளர்கள் தங்களின் மொபைல்போன்களை சார்ஜ் செய்யும் மையங்களையும், தற்காலிக பைவை மையங்களையும் ஏர்டெல் நிறுவனம் தொடங்கியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x