Last Updated : 31 Aug, 2018 06:04 PM

 

Published : 31 Aug 2018 06:04 PM
Last Updated : 31 Aug 2018 06:04 PM

6 மாநில சமூகச் செயல்பாட்டாளர்கள் கைது விவகாரம்: வலுவான ஆதாரங்கள் இருப்பதாக மகாராஷ்டிர போலீஸ் திட்டவட்டம்

மாவோயிஸ்டுகளோடு சேர்ந்து இந்திய அரசாங்கத்தை கவிழ்க்கும் சதித்திட்டடத்தில் முக்கிய பங்காற்றியதாக குற்றம்சாட்டப்பட்டவர்கள்தான் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் இதற்கான வலுவான ஆதாரங்கள் கைவசம் உள்ளதாகவும் மகாராஷ்டிரா போலீஸ் தெரிவித்துள்ளது.

மாவோயிஸ்ட்களுடன் தொடர்பு இருப்பதாக கூறி புனே போலீஸாரால் கைது செய்யப்பட்ட சமூக செயற்பாட்டாளர்கள் அனைவரும், உச்ச நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு விடுவிக்கப்பட்டனர். இவர்கள் தற்போது வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மும்பையில் செய்தியாளர்கள்  சந்திப்பில், காவல்துறை கூடுதல் டிஜிபி (சட்டம் ஒழுங்கு) பரம்பீர் சிங், கைது செய்யப்பட்டவர்கள் பரிமாறிக்கொண்ட கடிதங்களை எடுத்துக்காட்டினார்.

அப்போது செய்தியாளர்களிடையே அவர் தெரிவித்த விவரம்:

''ரஷ்யாவிலிருந்தும் சீனாவிலிருந்தும் வாங்கப்பட்ட ஆயுதங்களைப் பயன்படுத்தி  இந்திய அரசாங்கத்தை கவிழ்ப்பதற்காக மாவோயிஸ்டு அமைப்புகள் பெரிய சதியில் ஈடுபட்டுள்ளன. இந்த சதித்திட்டத்தில் குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டவர்களுக்கும் பங்கிருக்கிறது'

இதற்கான வலுவான ஆதாரங்கள் எங்களிடம் கைவசம் உள்ளன.குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டவர்களின் கூட்டங்கள் பாரிஸ் மற்றும் பிற சர்வதேச அமைப்புகளிலும் நடத்தப்பட்டன, அங்கிருந்து இவர்களுக்கு நிதியுதவி வருகிறது, இதனால்  இங்கு தங்கள் சதிவேலைகளை இவர்கள் தொடர்கிறார்கள்.

குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள இவர்கள் அனைவரும் மணிப்பூர் மற்றும் காஷ்மீரில் உள்ள பிரிவினைவாதிகள் மற்றும் தீவிரவாதிகளுடன் தொடர்பு வைத்துள்ளார்கள். ஜம்மு காஷ்மீரில் நடக்கும் கல்லெறி சம்பவங்களைப் போன்று நாட்டின் பலபகுதிகளிலும் கல்லெறி சம்பவங்களை நடத்த இவர்கள் தூண்டுகோலாக செயல்பட விரும்புகிறார்கள்.

விசாரணைகளை குலைக்கும் விதமாக அவர்கள் பிரச்சாரம் இருந்தது. " மிக மிக வலிமையான ஆதாரங்கள் உள்ளன. அவர்களைப் பற்றிய சர்ச்சைக்குரிய ஆதாரங்கள் வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளன. தடயவியல் துறையிடம் இந்த ஆதாரங்கள் தற்போது உள்ளன.  நாங்கள் அதனை திரித்துக் காட்டவில்லை.

நக்சல் தொடர்பு குற்றம்சாட்டப்பட்டு  நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட டெல்லி பல்கலைக் கழக பேராசிரியர் ஜி.என் சாய்பாபாவுக்கு எதிராக உள்ள வழக்கு போன்று இவ்வழக்கும் மிக வலிமையாக உள்ளது.

நகர்ப்புற நக்சல்கள் புதிய பிரயோகம் அல்ல

நகர்ப்புற நக்சல்கள் என்பது ஏதோ புதியதாக பிரயோகிக்கும் வார்த்தைகள் அல்ல. இது 20 ஆண்டுகளாகவே பயன்படுத்திவரும் சொற்கள்தான். என்னுடைய காவல் பணியிலேயே இதை பல ஆண்டுகளாக நான் பயன்படுத்தி வருகிறேன். "நகர்ப்புற நக்சல்கள் தடை செய்யப்பட்ட மாவோயிஸ்டு அமைப்புக்களின் மத்திய குழுவோடு தொடர்பு கொண்டிருப்பவர்கள்'

இவ்வாறு காவல்துறை கூடுதல் டிஜிபி (சட்டம் ஒழுங்கு) பரம்பீர் சிங் தெரிவித்தார்.

 

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x