

குவாலியர்: குவாலியரில் ஷீதள மாதா கோயில் விழாவின்போது தரிசனத்துக்காக காத்திருந்தவர்கள் மீது லாரி மோதியதில் 14 பக்தர்கள் உயிரிழந்தனர். 40-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
மத்திய பிரதேசத்தின் குவாலியர் நகர் அருகே சடாவ் கிராமத்தில் 350 ஆண்டுகள் பழமையான ஷீதள மாதா கோயில் அமைந்துள்ளது. குழந்தை வரம் வேண்டி இந்தக் கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் செல்வது வழக்கம்.
நவராத்திரி விழாவை ஒட்டி இக்கோயிலில் சனிக்கிழமை இரவு முதல் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அம்மனை வழிபட பக்தர்கள் மிக நீண்ட வரிசையில் காத்திருந்தனர். கோயில் வளாகத்துக்கு வெளியே சின்னர் சாலை வரை வரிசை நீண்டிருந்தது.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1.30 மணிக்கு சின்னர் சாலை வழியாக நெல் மூட்டைகள் ஏற்றப்பட்ட இரு லாரிகள் வந்தன. சாலையில் பக்தர்கள் கூட்டம் இருப்பதைப் பார்த்த இரு லாரிகளின் ஓட்டுநர்களும் பிரேக் பிடித்தனர். ஆனால் ஒரு லாரியின் பிரேக் செயலிழந்து லாரி நிற்காமல் சென்றது.
மலைப் பகுதி என்பதால் சரிவான சாலையில் அதிவேகமாக கீழே இறங்கிய லாரி பக்தர்கள் மீது மோதியது. இதில் 14 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
40-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் 6 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
பிரதமர் மோடி இரங்கல்
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000-ம் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
இந்த விபத்து குறித்து குவாலியர் போலீஸார் கூறியதாவது: இரு லாரிகளின் ஓட்டுநர்களுக்கும் பாதை தெரியாமல் கூகுள் மேப்பை பயன்படுத்தி உள்ளனர். இதன்படி இரு லாரிகளும் வழிதவறி ஷீதள மாதா கோயில் பகுதிக்கு வந்துள்ளன.
முன்னால் வந்த லாரியின் பிரேக் செயலிழந்து பக்தர்கள், சாலையோர கடைகள் மீது அடுத்தடுத்து மோதி உள்ளது. லாரியின் ஓட்டுநர், உரிமையாளரை கைது செய்து உள்ளோம். இவ்வாறு போலீஸார் தெரிவித்தனர்.
இதனிடையே, நகர காவல் கண்காணிப்பாளர் பணியிலிருந்து விடுவிக்கப்பட் டுள்ளார். 8 காவல் துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.