Published : 06 Aug 2018 04:30 PM
Last Updated : 06 Aug 2018 04:30 PM

ஆகஸ்ட் 9-ம் தேதி மாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தல்: எதிர்க்கட்சிகள் சார்பில் பொதுவேட்பாளர்?

 

மாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தல் ஆகஸ்ட் 9-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில் ஆளும் பாஜக கூட்டணிக்கு போட்டியை ஏற்படுத்தும் வகையில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொதுவேட்பாளர் நிறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாநிலங்களவை துணைத் தலைவர் பி.ஜே குரியனின் பதவிக்காலம் முடிவடைந்துள்ளது. இதையடுத்து புதிய துணைத் தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும். கடந்த 2004-ம் ஆண்டு முதல் இந்தப் பதவி காங்கிரஸ் வசம் உள்ளது.

2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜகவை வீழ்த்த, காங்கிரஸ் வலிமையான கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதற்கு முன்னோட்டமாக மாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தலில் அனைத்துக் கட்சிகளையும் ஒன்று திரட்டும் முயற்சியில் காங்கிரஸ் மேற்கொண்டுள்ளது.

245 எம்.பிக்களை கொண்ட மாநிலங்களவையில் பாஜகவுக்கு 69 எம்.பி.க்களும், இரண்டாவது இடத்தில் உள்ள காங்கிரஸூக்கு 51 எம்.பி.க்களும் உள்ளனர். கூட்டணிக் கட்சிகளுடன் சேர்ந்து பாஜகவின் பலம் தற்போது 87 ஆக உள்ளது. எனினும் அதிமுக, ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் எப்படியும் இந்தத் தேர்தலில் வெற்றி பெற பாஜக முயற்சி மேற்கொண்டுள்ளது.

அதேசமயம் பாஜக பெரும்பான்மை இல்லாத நிலையில் எதிர்க்கட்சிகளின் ஒட்டுமொத்த ஆதரவுடன் பொது வேட்பாளரை நிறுத்தி வெற்றிபெற காங்கிரஸ் திட்டமிட்டு வருகிறது.

இந்த சூழலில், மாநிலங்களவைத் துணைத் தலைவர் தேர்தல் ஆகஸ்ட் 9-ம் தேதி நடைபெறும் என மாநிலங்களவைத் தலைவரும், குடியரசு துணைத் தலைவருமான வெங்கய்ய நாயுடு அறிவித்துள்ளார். வேட்புமனுத் தாக்கல் செய்ய ஆகஸ்ட் 8-ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x