Published : 27 Aug 2018 10:52 AM
Last Updated : 27 Aug 2018 10:52 AM

வாஜ்பாய் மரணம் எப்போது? - திடீர் சந்தேகத்தை கிளப்பும் சிவசேனா

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மரணம் முன்கூட்டியே நடந்திருக்கலாம் என சிவசேனா திடீர் சந்தேகத்தை கிளப்பியுள்ளது.

முன்னாள் பிரதமரும், பாஜக மூத்த தலைவருமான ஏ.பி.வாஜ்பாய் வயது மூப்பு, உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி, வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார்.

கடந்த ஜூன் மாதம் அவருக்கு சிறுநீர் தொற்று, சிறுநீரகப் பிரச்சினை, மார்பு சளி உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்பட்டதால், டெல்லி எய்ம்ஸ் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எய்ம்ஸ் மருத்துவமனையில் சிறப்பு மருத்துவர்கள் குழுவின் கண்காணிப்பில் வாஜ்பாய்க்கு சிறப்பு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தன.

அவர் ஆகஸ்ட் 16-ம் தேதி சிகிச்சை பலனின்றி காலமானார். 17-ம் தேதி அவரது உடல் டெல்லியில் தகனம் செய்யப்பட்டது. அவரது அஸ்தி சேகரிக்கப்பட்டு நாடு முழுவதும் உள்ள நதிகள், கடலில் கரைக்கபட்டு வருகின்றது.

இந்தநிலையில் வாஜ்பாய் மரணத்தில் சிவசேனா திடீர் சந்தேகம் கிளப்பியுள்ளது. இதுகுறித்து சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ரவுத் கூறுகையில் ‘‘முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆகஸ்ட் 16-ம் தேதி தான் இறந்தாரா என்ற சந்தேகம் உள்ளது. ஆகஸ்ட் 12, 13 தேதிகளிலேயே அவரது உடல்நிலை மோசமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவரது மரணம் முன்னதாக நடந்தால் தேசியக்கொடி அரை கம்பத்தில் பறக்கும் என்பதால், ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்பட முடியாத சூழல் ஏற்படும். சுதந்திர தினத்தில் டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக்கொடி ஏற்றி உரையாற்றும் வாய்ப்பு நழுவிவிடக்கூடாது என்பதற்காகவே வாஜ்பாய் மரண அறிவிப்பு மாற்றப்பட்டதா என்ற சந்தேகம் உள்ளது’’ என குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x