Published : 19 Aug 2018 02:25 PM
Last Updated : 19 Aug 2018 02:25 PM

மாணவி கையில் செல்போனைத் திணித்து இரவில் பேசுமாறு டார்ச்சர்: மறுத்ததால் உயிரோடு எரித்த கும்பல்

உத்தரப் பிரதேச மாநிலம் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் முதன்மை வகிக்கிறது. மாணவி கையில் செல்போனைத் திணித்து தங்களுடன் இரவில் பேச வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளனர், மறுத்த மாணவியை உயிரோடு எரித்த சம்பவம் பரபரப்பாகியுள்ளது.

உ.பி. மாநிலம் மீரட் மாவட்டத்தில் உள்ள சர்தானா நகரத்தில் பள்ளி மாணவி ஒருவர் தினமும் மாலையில் ட்யூசன் செண்டருக்குச் செல்வது வழக்கம். அப்போது வழியில் நின்று கொண்டிருக்கும் சில நபர்களால் அவருக்கு தினமும் தொல்லைகள் அதிகரித்தன.

இந்நிலையில் டியூஷன் முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்த அந்த மாணவி கையில் செல்போனைத் திணித்து நள்ளிரவில் தங்களுடன் பேசியாக வேண்டும் என்று டார்ச்சர் செய்துள்ளனர். அதிர்ச்சியடைந்த மாணவி எப்படியோ விட்டுக்கு வந்து தன் பெற்றோரிடம் நடந்த சம்பவத்தை விவரித்து அழுதுள்ளார். அவர்கள் கொடுத்த செல்போனையும் தன் தந்தையிடம் கொடுத்து விட்டாள்.

இதனையடுத்து மாணவியின் தந்தை, உறவினர் செல்போனைக் கொடுத்த நபரின் வீட்டுக்குச் சென்று அவன் பெற்றோரிடம் புகார் கூறியதோடு எச்சரிக்கையும் செய்தனர்.

இதனால் அந்த நபர் மற்றும் இவர் சார்ந்த 6 பேருக்கும் கோபாவேசம் ஏற்பட்டது. அவர்கள் நேராக மாணவி வீட்டுக்கு வந்தனர், வீட்டில் யாரும் இல்லை, மாணவி மட்டும் தனியாக இருந்துள்ளார். அவரிடம் செல்போனை ஏன் தந்தையிடம் கொடுத்தாய் என்று தகராறு செய்து வாய்க்கு வந்தபடி ஏசினர்.

பேச்சு முற்ற திடீரென அவர்கள் மண்ணெண்ணெயை மாணவி மீது ஊற்றி தீவைத்தனர், வீடும் பற்றி எரியத் தொடங்கவே அவர்கள் தப்பிவிட்டனர். பிறகு அண்டை வீட்டார்கள் பரபரப்பாக இயங்கி தீயை அணைத்தனர்.

தீயில் எரிந்து கொண்டிருந்த மாணவியை மீட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்த்தனர், அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மாணவி மீது தீவைத்தவர்களில் இருவரை போலீஸார் கைது செய்தனர். மற்றவர்களுக்கு வலை வீசப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x