Published : 27 Aug 2018 05:22 PM
Last Updated : 27 Aug 2018 05:22 PM

நீளக் கூந்தல் என்னை ஈர்த்தது- கஜகஸ்தான் பெண்ணை மணந்த விஜயவாடா இளைஞர்

காதலுக்குக் கண்ணில்லை என்பார்கள்; எல்லைகளும் இல்லை போல. விஜயவாடாவைச் சேர்ந்த பிரசாத் என்ற இளைஞர் கஜகஸ்தானைச் சேர்ந்த ஷகிஸ்டா என்னும் இளம்பெண்ணைத் திருமணம் செய்துள்ளார்.

இந்தக் காதல் திருமணம் விஜயவாடாவில் ஆந்திர முறைப்படி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடந்து முடிந்துள்ளது.

விஜயவாடாவில் படிப்பை முடித்த பிரசாத் வேலைக்காக ஈராக் சென்றார். அங்கிருந்து கஜகஸ்தான் சென்றவர், எண்ணெய் நிறுவனமொன்றில் துணை மேலாளராகப் பணியாற்றினார். அங்கேதான் ஷகிஸ்டாவும் நிர்வாகியாகப் பணியாற்றியுள்ளார்.

இதுகுறித்து 'தி இந்து'விடம் பேசிய பிரசாத், ''நாங்கள் இருவரும் முழுமையாக வெவ்வேறு பின்னணியில் இருந்து வந்திருந்தாலும் எங்களின் திருமணத்தில் பிரச்சினை எழவில்லை. அதற்கு எங்கள் இருவருடைய பெற்றோர்தான் காரணம்.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் பிப்ரவரி மாதம் ஷகிஸ்டாவை அலுவலக கேன்டீனில் சந்தித்தேன். அவருடைய நீளமான கூந்தல் என்னை ஈர்த்தது.

கவிஞர் ரூமி அழகாய்ச் சொல்லி இருக்கிறார். 'நீ எதைத் தேடுகிறாயோ அது உன்னை தேடுகிறது!'.அதுதான் எங்கள் வாழ்க்கையிலும் நடந்தது.

ஷகிஸ்டா குறித்து என்னுடைய சக பெண் ஊழியரிடம் பேசிக் கொண்டிருந்தேன். அப்போதுதான் அவரும் ஷகிஸ்டாவும் அறைத் தோழிகள் என்று தெரிந்தது. அவரிடம் ஷகிஸ்டாவை அறிமுகப்படுத்தச் சொன்னேன். இருவரும் சந்தித்தோம். அப்போதுதான் அவருக்கும் என் மேல் ஈர்ப்பு இருந்தது தெரியவந்தது.

நாங்கள் இருவரும் தேடினோம். இணைந்தோம், திருமணம் செய்துகொண்டோம்'' என்கிறார் பிரசாத்.

தற்போது கஜகஸ்தான் செல்லும் பிரசாத், பணியை முடித்துவிட்டு விரைவில் நாடு திரும்ப உள்ளார். அதுவரை மாமனார், மாமியாருடன் கணவனுக்காகக் காத்திருப்பார் ஷகிஸ்டா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x