Published : 28 Aug 2018 07:29 PM
Last Updated : 28 Aug 2018 07:29 PM

கடவுளின் தேசம் இப்போது எப்படி இருக்கு தெரியுமா?- நாசா வெளியிட்ட புகைப்படத்தில் அதிர்ச்சி

பெயருக்கு ஏற்றார்போல், கேரள மாநிலம், வெள்ளத்துக்கு முன் கடவுளின் தேசமாகத்தான் இருந்தது. ஆனால், பெருவெள்ளத்துக்குப் பின் நாசா வெளியிட்ட கேரளாவின் புகைப்படம் பார்ப்பவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது.

கேரளாவில் தென் மேற்கு பருவமழை கடந்த மே மாதம் 29-ம் தேதி தொடங்கியது. அதன்பின் பரவலாக அவ்வப்போது மழை பெய்தநிலையில் கடந்த 8-ம் தேதிக்குப்பின் மழை தீவிரமானது. கடந்த 8-ம் தேதிமுதல் 10 நாட்களாக மாநிலத்தில் மழை கொட்டித் தீர்த்தது.

பெருமழைக்கும் அதனால் ஏற்பட்ட வெள்ளத்துக்கும் 400-க்கும் மேற்பட்ட மக்கள் பலியானார்கள், 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளையும், சொத்துக்களையும் இழந்து நிவாரண முகாம்களில் தங்கவைப்பட்டனர். இந்த வெள்ளத்தால் மாநிலத்தில் 14 மாவட்டங்களில் 13 மாவட்டங்களில் வெள்ள நீரில் மூழ்கின. வீடுகள், கட்டிடங்கள், பள்ளிக்கூடங்கள், கோயில்கள், விடுதிகள், ஹோட்டல்கள் என பெரும்பாலானவை வெள்ள நீரில் மூழ்கின.

மாநிலத்துக்கு ஏறக்குறைய இந்த வெள்ளத்தால் ரூ.20 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக மழை இல்லாத காரணத்தால், வெள்ள நீர் வடிந்து வருகிறது.

வீடுகளில் 2 அடிமுதல் 3 அடிவரை தேங்கியுள்ள சேறு, குப்பைகளை அகற்றி, சுத்தம் செய்யும் பணிகளை மேற்கொண்டு மக்கள் மீண்டும் வீடுகளில் குடியேறி வருகின்றனர்.

இந்நிலையில், நாசா விண்வெளி ஆய்வு மையம் வெள்ளத்துக்கு முந்தைய கேரள மாநிலத்தின் செயற்கைக்கோள் புகைப்படத்தையும், வெள்ளம் வந்தபின் கேரள மாநிலத்தின் செயற்கைக்கோள் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளது.

அதாவது, வெள்ளத்துக்கு முன் பிப்ரவரி 6-ம் தேதி வெளியிட்ட புகைப்படத்தில் கேரளாவில் பசுமை போர்த்திய வயல்வெளிகள், புல்வெளிகள், காடுகள் எனப் பச்சை போர்வை போர்த்தியதுபோல் இருக்கிறது. ஆனால், ஆகஸ்ட் 22-ம் தேதி எடுக்கப்பட்ட புகைப்படத்தில் பெரும்பாலான மாவட்டங்கள் வெள்ள நீரில் மிதக்கும் காட்சிகள் தெரிகின்றன.

குறிப்பாக ஆலப்புழா, சங்கனாச்சேரி, கோட்டயம், இடுக்கி, திருவல்லா ஆகிய பகுதிகள் வெள்ள நீரில் மிதிக்கும் காட்சிகள் கருநீல வண்ணத்தில் தெரிகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x