Last Updated : 22 Jul, 2018 01:57 PM

 

Published : 22 Jul 2018 01:57 PM
Last Updated : 22 Jul 2018 01:57 PM

‘அடிக்கடி சட்டப்பேரவைத் தேர்தல் வந்தால், ஜிஎஸ்டி வரி குறையும்’: ப.சிதம்பரம் கிண்டல்

விரைவில் 4 மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலை மனிதில் வைத்து 100-க்கும் மேற்பட்ட பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு குறைத்துள்ளது,அடிக்கடி சட்டப்பேரவைத் தேர்தல் வர வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கிண்டல் செய்துள்ளார்.

28-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நேற்று டெல்லியில் நடந்தது. இதில் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் 88 வகையான பொருட்களுக்கு வரி குறைக்கப்பட்டது, ஒட்டுமொத்தமாக 100-க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு வரி குறைக்கப்பட்டது. வர்த்தகர்களும் 3 மாதங்களுக்கு ஒருமுறை ஜிஎஸ்டி ரிட்டன் தாக்கல் செய்ய அனுமதிக்கப்பட்டது.

குறிப்பா நாப்கின்களுக்கு வரிவிலக்கும், ராக்கி கயிறு, கோயில்கள் கட்டுமானத்துக்கு பயன்படும் கற்கள் உள்ளிட்ட பொருட்களுக்கு வரிவிலக்கும் அளிக்கப்பட்டது. சிறியதிரை கொண்ட டிவி, பிரிட்ஜ், வாஷிங்மெஷின், வாட்டர்ஹீட்டர் உள்ளிட்ட பொருட்களுக்கு வரி 18 சதவீதமாகக் குறைக்கப்பட்டது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் குஜராத் மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலைக்கருத்தில் கொண்டு மத்திய அரசு 50 பொருட்களுக்கான வரியைக் குறைத்தது.

இந்நிலையில், இந்த ஆண்டு இறுதியில் ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சட்டப்பேரவைத் தேர்தல் வருகிறது. அதற்கு முன்னோட்டமாக ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

முன்னாள் நிதிஅமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் ட்விட்டரில் கூறியிருப்பதாவது:

தற்போது நடைமுறையில் இருக்கும் ஜிஎஸ்டி சீரமைக்கப்படாமல் இருக்கிறது. மத்திய அரசு உடனடியாக 3 வகையான வரி முறையை உடனடியாக கவனித்து அதில் அக்கறை செலுத்த வேண்டும். விரைவில் ஒரே மாதிரியான ஜிஎஸ்டி வரிக்கு நகர வேண்டும் என்பதே என்னுடைய கருத்தாகும். அதுதான் உண்மையான ஜிஎஸ்டி.

இந்த ஆண்டு இறுதியில் பல மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல், அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் வருகிறது. அதைக் கருத்தில் கொண்டே மத்திய அரசு ஜிஎஸ்டி வரியைக் குறைத்துள்ளது. பல்வேறு மாநிலங்களில் அடிக்கடி இதுபோன்று தேர்தல் நடந்தால்,ஜிஎஸ்டி வரி அடிக்கடி குறைக்கப்பட்டு வரும்.

ஜிஎஸ்டி கவுன்சில் 100 பொருட்களுக்கான வரியைக் குறைத்துள்ளது. காலாண்டுக்கு ஒருமுறை வர்த்தகர்கள் ரிட்டன் தாக்கல் செய்ய அனுமதித்துள்ளது. தாமதமாக நல்ல நிகழ்வுகள் நடந்துள்ளது.

கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் இருந்து காங்கிரஸ் கட்சியின் அறிவுரையை ஏன் மத்திய அரசு பின்பற்றவில்லை.

ஜிஎஸ்டி சட்டத்தில் இன்னும் பல்வேறு இடைவெளிகள், குறைகள் இருக்கின்றன. அந்த இடைவெளியை, குறைபாடுகளைக் களைவதற்கு இந்த அரசுக்கு விருப்பம் இருக்கிறதா அல்லது திறமை இருக்கிறதா என நான் சந்தேகிக்கிறேன்.

இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x