Last Updated : 31 Jul, 2018 08:21 PM

 

Published : 31 Jul 2018 08:21 PM
Last Updated : 31 Jul 2018 08:21 PM

“தமிழகத்தில் இருந்து இந்தியாவுக்கு வரும் அகதிகள்”: மத்திய அமைச்சர் பேச்சால் மக்களவையில் கடும் அமளி

தமிழகத்தில் இருந்து இந்தியாவுக்கு அதிக அளவில் அகதிகள் வருகிறார்கள் என்று மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு மக்களவையில் இன்று பேசியதால் கடும் அமளி ஏற்பட்டது.

அதிமுக, காங்கிரஸ் எம்.பி.க்கள் கோஷமிட்டு எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, தான் வாய்தவறி பேசிவிட்டதாகக் கூறிவிட்டார்.

மக்களவையில் பல்வேறு துணைக் கேள்விகளுக்கு இன்று மத்திய உள்துறை இணைஅமைச்சர் கிரண் ரிஜிஜு பதில் அளித்தார். அப்போது அகதிகள் விவகாரம் குறித்துப் பேசுகையில்,” மியான்மரில் இருந்து இந்தியாவுக்குள் வரும் ரோஹிங்கயா முஸ்லிகளுக்கு அகதிகள் அங்கீகாரம் கொடுக்க முடியாது. அவர்கள் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் வருகிறார்கள். சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அதேசமயம், அகதிகள் என்று அங்கீகாரம் அளிக்கப்பட்டால், அவர்களுக்கு உரிய உரிமை அளிக்கப்படும். சட்டவிரோதமாக நுழையும் அகதிகளைத் தடுக்க சரியான முறை வகுக்கப்பட வேண்டும். இது நாட்டின் நலனுக்கும், மக்களின் நலனுக்கும் மிகவும் அவசியமாகும்.

ஆனால், வங்கதேசம், மியான்மர், தமிழ்நாட்டில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் அகதிகள் வருகிறார்கள் என்று பேசினார்.

தமிழகம் இந்தியாவில் இருக்கிறது, தமிழக்தில் இருந்து அகதிகள் இந்தியாவுக்குள் எப்படி நுழைய முடியும் என்று அதிமுக, காங்கிரஸ், இடதுசாரிகள் எம்.பி.க்கள் கோஷமிட்டு, கடும் அமளியில் ஈடுபட்டனர்.

அப்போது, அமைச்சர் கிரண்ரிஜிஜு, நான் இலங்கையில் இருந்து அகதிகள் என்று கூறுவதற்கு பதிலாக, தமிழ்நாடு என்று வாய்தவறி கூறிவிட்டேன் என்று கூறினார். ஆனால், அதிமுக எம்.பி.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுப்பட்டனர்.

இதையடுத்து சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தலையிட்டு, உறுப்பினர்களை அமைதிப்படுத்தி, நா பிறழ்வால் அமைச்சர் அவ்வாறு பேசிவிட்டார் அமைதியாக அமருங்கள் என்று கேட்டுக்கொண்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x