மரபணு திருத்தப்பட்ட 2 நெல் ரகம்: மத்திய அமைச்சர் சவுகான் அறிமுகம்

மரபணு திருத்தப்பட்ட 2 நெல் ரகம்: மத்திய அமைச்சர் சவுகான் அறிமுகம்
Updated on
1 min read

புதுடெல்லி: நாட்டில் முதல்முறையாக மரபணு திருத்தம் செய்யப்பட்ட 2 நெல் ரகங்களை மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் நேற்று முன்தினம் அறிமுகப்படுத்தினார்.

மரபணு திருத்தம் எனப்படும் 21-ம் நூற்றாண்டு இனப்பெருக்க தொழில்நுட்பத்தை பயன்படுத்தி காலநிலை மாற்ற பாதிப்புகளை தாக்குப் பிடிக்கும் வகையில் இரு புதிய நெல் ரகங்களை உருவாக்கி இந்திய விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.

டெல்லியில் உள்ள இந்திய வேளாண் ஆய்வு நிறுவனம் மற்றும் ஹைதராபாத்தில் உள்ள இந்திய அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தின் விஞ்ஞானிகள் இணைந்து இவற்றை உருவாக்கியுள்ளனர். வெளி மரபணு சேர்க்கப்படதால் இவற்றை மரபணு மாற்ற ரகமாக கருத முடியாது. இதன் மூலம் மரபணு திருத்த அரிசி ரகங்களை உருவாக்கிய உலகின் முதல் நாடாக இந்தியா உருவாகியுள்ளது.

டிஆர்ஆர் தன் (கமலா), பூசா டிஎஸ்டி 1 என்ற இந்த புதிய நெல் ரகங்களை டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்ற விழாவில் மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் அறிமுகப்படுத்தினார்.

விழாவில் அவர் பேசியதாவது: இந்திய வேளாண் துறைக்கு இது முக்கிய நாளகும். விரைவில் இந்த நெல் ரகங்கள் விவசாயிகளுக்கு கிடைக்கும். இந்த நெல் ரகங்கள் 20 முதல் 30 சதவீதம் அதிக மகசூல் தரும். தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தும், அரிசி உற்பத்தியில் பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தை குறைக்கும். இதனால் சுற்றுச்சூழலுக்கும் நன்மை பயக்கும்.

தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, ஒடிசா, மேற்கு வங்கம் உள்ளிட்ட முக்கிய அரிசி உற்பத்தி மாநிலங்களுக்கு இந்த ரகங்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.

எதிர்காலத்தில், உணவுப் பாதுகாப்பை உறுதி செய்தல், உற்பத்தியை அதிகரித்தல், இந்தியாவுக்கும் உலகுக்கும் உணவு வழங்குதல் இந்தியாவை உலகின் உணவுக் கூடையாக மாற்றுதல் ஆகியவற்றுக்கான தேவை உள்ளது. மத்திய அரசின் முயற்சியால் பாஸ்மதி அரிசி ஏற்றுமதி ஆண்டுக்கு ரூ.48,000 கோடியாக உயர்ந்திருப்பதில் பெருமை கொள்கிறோம். இவ்வாறு அமைச்சர் சிவராஜ் சவுகான் பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in