ஒடிசாவின் கேஐஐடியில் மாணவி உயிரிழப்பு: முழு விசாரணை கோரும் நோபள அரசு

ஒடிசாவின் கேஐஐடியில் மாணவி உயிரிழப்பு: முழு விசாரணை கோரும் நோபள அரசு
Updated on
1 min read

புவனேஸ்வர்: ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள கலிங்கா இன்ஸ்ட்டிட்யூட் ஆஃப் இண்டஸ்ட்ரீயல் டெக்னாலஜி-யில் (KIIT) நேபாளத்தைச் சேர்ந்த 18 வயது மாணவி தற்கொலையால் உயிரிழந்தார். இரண்டரை மாதங்களில் 2-வது நேபாளி உயிரிழந்த நிலையில் இச்சம்பவங்கள் குறித்து முழு விசாரணை கோரியுள்ளது அந்நாட்டு அரசு.

நேபாள மாணவி தனது விடுதி அறையின் மின்விசிறியில் தூக்கிட்டு இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சில மணி நேரங்களில், அரசு இவ்வாறு கோரியுள்ளது. முன்னதாக இதே கல்விநிறுவனத்தில் நேபாளத்தைச் சேர்ந்த பிரகிருதி லாம்சல் என்ற மாணவர் பிப்.16-ம் தேதி தற்கொலை செய்துகொண்ட இரண்டரை மாதம் கழித்து இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மாணவியின் மரணம் குறித்து நேபாளத்தின் வெளியுறவு அமைச்சர் அர்ஷு ரானா தேவுபா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஒடிசாவிலுள்ள கேஐஐடியில் படித்துவந்த நேபாளத்தைச் சேர்ந்த மாணவி பிரிசா ஷா, அவரது விடுதி அறையில் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது எங்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. பிரிசா ஷாவின் ஆன்மா சாந்தியடைய நான் பிரார்த்திக்கிறேன். அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சம்பவம் நடந்த உடனேயே, இந்திய அரசு, ஒடிசா அரசு, இந்தியாவில் உள்ள நேபாளத்தின் துணை தூதரக அதிகாரிகள் மூலம் இந்தச் சம்பவத்தின் உண்மைத் தன்மை குறித்து ஆராய்வதற்கு வெளியுறவு அமைச்சகம் ராஜாங்க முயற்சிகளைத் தொடங்கியது.” என்று தெரிவித்துள்ளார்.

நேபாளத்தைச் சேர்ந்த பி டெக் (கணினி அறிவியல்) படித்து வந்த மாணவியின் உடல் அவரது விடுதி அறை எண் 111-ல் இருந்து வியாழக்கிழமை மீட்கப்பட்டது என்று மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

காவல்துறை ஆணையர் எஸ். தேவ் தத்தா சிங் கூறுகையில், “நேபாளத்தைச் சேர்ந்த மாணவி ஒருவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. அவர் கேஐஐடியில் உள்ள விடுதி அறையில் தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிகிறது. அவரது உடல் புவனேஸ்வர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. உயிரிழந்த மாணவியின் பெற்றோர் வெள்ளிக்கிழமை புவனேஸ்வர் வருவார்கள். அதற்கு பின்பு உடற்கூறாய்வு செய்யப்படும்” என்றார். இந்தச் சம்பவம் குறித்து இயற்கைக்கு மாறான மரணம் என வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக மற்றொரு அதிகாரி தெரிவித்தார்.

முன்னதாக, கேஐஐடி-யில் மூன்றாம் ஆண்டு பி டெக் (கணினி அறிவியல்) படித்து வந்த மாணவி பிரகிருதி லாம்சல் (20) கடந்த 16 அன்று தனது விடுதி அறையில் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்பட்டது. இந்தச் சம்பவம் கல்வி நிறுவன வளாகத்தில் அமைதியின்மையை ஏற்படுத்தியது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in