Last Updated : 11 Jul, 2018 07:47 AM

Published : 11 Jul 2018 07:47 AM
Last Updated : 11 Jul 2018 07:47 AM

இந்தி சினிமாக்காரர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள்...?

கி

ரிக்கெட்டை விட இந்தி சினிமா அதிகம் பணம் புரளும், ஸ்டார்கள் ஜொலிக்கும் தொழில். ஆனால் இவ்வளவு இருந்தும் ஏன் பயந்தாங்கொள்ளியாக இருக்கிறது என்பதுதான் ஆச்சரியமாக இருக்கிறது.

விது வினோத் சோப்ரா - ராஜ்குமார் ஹிராணி கூட்டணியில் சஞ்சய் தத் நடித்த 'சஞ்சு' படம் வெளியாகி இருக்கிறது. அதில் ராஜ் தாக்கரேவுக்கு நன்றி தெரிவித்திருப்பார்கள். அமெரிக்காவில் பொது மேடையில் பிரபல ஹாலிவுட் நடிகர் ராபர்ட் டி நீரோ, அதிபர் டிரம்பை வெளிப்படையாக விமர்சித்துள்ள இந்த நேரத்தில் இங்குள்ள சினிமா தயாரிப்பாளர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள் எனத் தெரியவில்லை.

ராஜ் தாக்கரே யார்? மகாராஷ்டிராவில் 288 பேரவைத் தொகுதிகளில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாதவர். 227 உறுப்பினர்களைத் தேர்வு செய்யும் மாநகராட்சியில் வெறும் 7 உறுப்பினர்களை மட்டுமே வெற்றிபெறச் செய்தவர். அப்படிப்பட்டவருக்கு ஏன் அடிபணிய வேண்டும் இந்த சினிமாக்காரர்கள். இதற்கான பதில் எளியது. அவரால் வெற்றி பெற முடியாது... ஆனால் அழிக்க முடியும். அந்தப் பயம்தான் காரணம்.

சுயசிந்தனையுடன் செயல்படும் ஒரு சில எழுத்தாளர்கள், ஓவியர்கள், பத்திரிகையாளர்கள் தவிர மற்ற அனைவருமே அதிகார வர்க்கத்துக்கும் அரசுக்கும், மாபியாக்களுக்கும் அடிவருடிகளாகவே இருக்கிறார்கள். அவர்களுக்குப் பணம் சம்பாதிக்க அப்படி இருக்க வேண்டியது இருக்கலாம். ஆனால் படம் வெளியான முதல் வாரத்திலேயே பல நூறு கோடி ரூபாய் சம்பாதிக்கும், பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள ஸ்டூடியோக்களை வைத்திருக்கும் இந்தி சினிமா உலகம் ஏன் பயந்து நடுங்க வேண்டும்?

அந்தக் காலத்தில் மகாராஜாக்கள் அப்புறம் சுல்தான்கள், பாதுஷாக்கள்தான் கலை, இலக்கியத்தின் காவலர்களாக இருந்தார்கள். அரசவையில் இசைக்கலைஞர்களும், நடனக் கலைஞர்களும், ஓவியர்களும் தங்கள் திறமையை வெளிப்படுத்தி சன்மானம் பெற்று வாழ்ந்தார்கள். அந்த விசுவாசத்தை இடம் மாற்றி இப்போது அரசாங்கத்திடம் காட்டி வருகிறார்கள் கலைஞர்கள்.

திரைத்துறையில் பணக்காரனாகவும் அதிகாரம் மிக்கவராகவும் இருப்பவர்களே மிகவும் பயந்தாங்கொள்ளியாக இருக்கிறார்கள். முதுகெலும்போடு இருக்கும் ஒரு சிலரில் பாடல் ஆசிரியர் குல்ஸாரும் (வயது 83) ஒருவர். மற்ற அனைவருமே அரசவைப் புலவர்கள்தான். அமிதாப் பச்சன் இப்போதெல்லாம் ஆட்சியாளர்களுக்கு எதிராக வாயே திறப்பதில்லை. ராஜ் பப்பர், சத்ருகன் சின்ஹா, ஹேமமாலினி, ஸ்மிருதி இரானி, திவ்யா ஸ்பந்தனா ஆகியோர் தைரியமாகச் செயல்படுகிறார்கள்.

ஹிரானி, த்ரீ இடியட்ஸ் முதல் முன்னா பாய் வரை பல நல்ல சமூகக் கருத்துகளுடன் கூடிய படங்களைத் தந்திருக்கிறார். 'மிஷன் காஷ்மீர்' படம் மூலம் சோப்ரா நாட்டுப்பற்றை ஊட்டியிருக்கிறார். அவர் படத்தின் ஹீரோ, பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ இந்தியாவை தகர்க்கத் செய்யும் சதிகளை முறியடித்து நம் கைத்தட்டலைப் பெறுவார்.

ஆனால், அவர் வசிக்கும் மும்பையில் ஐஎஸ்ஐ-க்கு பாதகம் இல்லாமல் கதை சொல்லப்படுகிறது. காரணம், தாவூத் இப்ராஹிம், அவருடைய சகோதரர் அனீஸ் (ஆயுதங்களையும் வெடி மருந்துகளையும் வாங்குவதற்கு முன்பு இவருக்குத்தான் சஞ்சய் தத் 6 முறை போன் செய்திருக்கிறார்.) மற்றும் நிழல் உலக தாதாக்கள் கராச்சியில் இருந்துகொண்டே மும்பையில் இன்னமும் ரவுடி ராஜ்ஜியத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் படத்தயாரிப்பாளர்கள் ரிஸ்க் எடுப்பதில்லை.

ஆமிர்கான் வெளிப்படையாகப் பேசி ஒருமுறை சிக்கலில் மாட்டினார். மிகப் பெரிய பிராண்ட் ஒப்பந்தம் ரத்தானது. ஷாரூக் கான் அந்த அளவுக்குப் போகாவிட்டாலும் அவருக்கும் நெத்தியடி விழுந்தது. அது முதல் அவரும் பேசுவதில்லை. சல்மான் கானோ எப்போதுமே நல்ல குணம் கொண்ட இந்து கதாபாத்திரத்தில்தான் நடிப்பார். அப்போது ஐஎஸ்ஐ-க்கு எதிராக அடித்து நொறுக்குவார்.

வாழ்க்கையில் என்ன நடக்கிறதோ அதைத்தான் கலை, இலக்கியங்கள் பிரதிபலிக்கும். ஆரம்பத்தில் இந்தி சினிமாவும் அப்படித்தான் இருந்தது. இப்போது அப்படி இல்லை. எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும்.. இதனால் 1993-ம் ஆண்டு நடந்த குண்டுவெடிப்புச் சம்பவங்கள் ஏற்படுத்திய பாதிப்பு மாறப்போவதில்லை.

ராஜ் தாக்கரே, தாவூத் இப்ராஹிம் போன்றவர்களைப் பார்த்தால் தலை வணங்கும் நிலை இருந்தால், மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. அரசாங்கத்துக்குப் பிடிக்கும் என்பதால் டாய்லெட் பற்றிப் படம் எடுக்கிறார்கள். ஆனால் கடந்த இந்தி சினிமாவின் முதல் 10 இடத்தில் இருக்கும் எந்த ஹீரோவுமே ஒரு தலித் ஆகவோ அல்லது கஷ்டப்படும் விவசாயி ஆகவோ பாத்திரம் ஏற்று நடிக்கவில்லை. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அதைப் பெருமையுடன் செய்வார்.

இந்தி சினிமா உலகமே சல்மான், ஷாரூக், அமீர் கான் காலடியில்தான் கிடக்கிறது. அதை எதிர்க்கத் துணிவில்லாமல் இருக்கிறார்கள். மும்பையில் சில போலீஸ்காரர்கள், நிழல் உலக குண்டர்களை என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்ல ஆரம்பித்த போது, அவர்களை தெய்வமாக நினைத்து வணங்கினர். ஆனால் அதே போலீஸார் பதவி நீக்கம் செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் வழக்குக்காக அலைந்தபோது ஒருவரும் உதவவில்லை.

இருந்தாலும் புதிய நம்பிக்கை பிறந்திருக்கிறது. இப்போது வரும் படங்களில் துணிச்சலாக அதிகார மையத்தைக் கேள்வி கேட்கிறார்கள். இவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவர்கள் டாப் நட்சத்திரங்கள் கிடையாதுதான். ஆனால் அவர்கள் சக்தி மிக்கவர்கள். அதனால், மற்றவர்கள் வழக்கம்போலவே இருந்துவிட்டுப் போகட்டும்... கவலை இல்லை.

சேகர் குப்தா, ‘தி பிரின்ட்’ தலைவர்,

முதன்மை ஆசிரியர்

தமிழில்: எஸ்.ரவீந்திரன்

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x