Published : 18 Jul 2018 09:39 PM
Last Updated : 18 Jul 2018 09:39 PM

நினைவுகள் முளைக்கும்: மகள் திருமணத்துக்காக எம்எல்ஏ அடித்த வித்தியாசமான அழைப்பிதழ்

கேரள மாநிலத்தைச் சேர்ந்த எம்எல்ஏ ஒருவர் தனது மகள் திருமணத்துக்காக வித்தியாசமான முறையில், யாரும் வீணாக்காத வகையில் அழைப்பிதழை உருவாக்கியுள்ளார்.

கேரளாவில் ஆளும் கட்சியான இடதுசாரி முன்னணிக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் சுயேட்சை எம்எல்ஏ வி.அப்துர் ரஹிம். இவரின் மகள் ரிஸ்வானா. இவருக்குத் திருமணம் செய்ய அப்துர் ரஹிம் முடிவு செய்து அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறார். வரும் 22-ம் தேதி மலப்புரம் மாவட்டம் திரூரில் திருமணம், அதைத்தொடர்ந்து விருந்து நிகழ்ச்சிகளும் நடக்கின்றன.

இதில் அழைப்பிதழை இதுவரை யாரும் உருவாக்காத வகையில் இருக்க வேண்டும் என்பதற்காகச் சிந்தித்து வித்தியாசமாகச் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையில் அழைப்பிதழை தயாரித்துள்ளார்.

கைகளால் தயாரிக்கப்பட்ட காகிதத்தில், பூக்களின் விதைகளும், காய்கறிகள், மூலிகை விதைகளும் கலந்து செய்யப்பட்டு அழைப்பிதழ் உருவாக்கப்பட்டுள்ளது. வழக்கமாகத் திருமண அழைப்பிதழைத் திருமணம் முடிந்த பின் கீழே வீசி எறிந்து விடுவோம்.

ஆனால், இந்த அழைப்பிதழைப் பூமியில் சிறிது ஆழக் குழிதோண்டி மண்ணில் புதைத்து சிறிது நீர் விட்டு சில நாட்கள் கழித்தால், அதிலிருந்து ஏராளமான மூலிகைச் செடிகளும், பூச்செடிகளும், மர விதைகளும் துளிர்விட்டிருக்கும். அதுமட்டுமல்லமால், இந்த அழைப்பிதழின் பின்புறம், ''அழைப்பிதழை வீணாக்கி வீசிவிடாதீர்கள் மண்ணில் புதையுங்கள் முளைத்து வருவேன்'' என்று விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன.

இது குறித்து எம்எல்ஏ அப்துர் ரஹ்மான் தொலைபேசியில் கூறுகையில், ''திருமண அழைப்பிதழ் என்பது வாழ்வில் ஒரு முறை அடிப்பதாகும். அன்பையும், பாசத்தையும், காதலையும் கலந்து அந்த அழைப்பிதழ் இருக்க வேண்டும். வழக்கமாகத் திருமணம் முடிந்த பின் அந்த அழைப்பிதழ்களைக் குப்பையில் வீசுவார்கள், அல்லது எரித்துவிடுவார்கள். ஆனால், பெங்களூரில் இருக்கும் நண்பர் ஒருவர் வித்தியாசமான முறையில் பத்திரிகை தயாரிக்கும் முறையைக் கூறினார்.

அதன்படி 100 சதவீதம் மறுசுழற்சியில் தயாரிக்கப்பட்ட காகிதத்தில், மரவிதைகள், பழமர விதைகள், பூக்கள், மூலிகைச் செடிகளின் விதைகள் பூசப்பட்ட அழைப்பிதழைத் தயாரிக்க முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் அழைப்பிதழையும் தயாரித்து, திருமணம் முடிந்தபின் அழைப்பிதழை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதையும் குறித்து அதில் குறிப்பிட்டோம்.

இந்த அழைப்பிதழின் மீது சிறிது மண்ணைக் கொட்டி, அதில் தண்ணீர்விட்டு, வெயில் படுமாறு வைத்துவிட்டாலே சில நாட்களில் அழைப்பிதழில் உள்ள விதைகள் முளைக்கத் தொடங்கிவிடும். இந்த அழைப்பிதழைத் தயாரிக்கும் சிறிது காலம் தேவைப்படும். இதன் விலை குறைவுதான். நூற்றுக்கணக்கான மக்களுக்கு வாழ்வு அளிக்கும் தொழிலாக இருந்து வருகிறது.

இப்படிப்பட்ட அழைப்பிதழை யாரேனும் வீசி எறிவார்களா, தோட்டத்தில் புதைத்துவைத்தால், அழைப்பிதழோடு சேர்ந்து என் மகளின் திருமண நினைவுகளும் சேர்ந்து முளைக்கும்'' என்று அப்துர் ரஹிம் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x