Published : 02 Jul 2018 08:51 AM
Last Updated : 02 Jul 2018 08:51 AM

ஹைதராபாத்தில் முஸ்லிம் சிறுமியை தத்தெடுத்த இந்து தம்பதியை கொல்ல முயன்ற 2 பேர் கைது

ஹைதராபாத்தில் முஸ்லிம் சிறுமியை தத்தெடுத்த இந்து தம்பதியை கொலை செய்ய முயற்சித்த இருவர் கைது செய்யப்பட்டனர்.

ஹைதராபாத்தில் 2007-ம் ஆண்டு ஆகஸ்ட் 25-ம் தேதி பயங்கர குண்டுவெடிப்பு நடந்தது. இதில் பலர் உயிரிழந்தனர். அப்போது, ஓர் இடத்தில் 3 வயது சிறுமி அழுது கொண்டிருந்தாள். இதைப் பார்த்த பெயிண்டிங் வேலை செய்யும் தொழிலாளி பாப்பாலால், அந்தக் குழந்தையிடம் பேசினார். அந்த சிறுமி தனது பெயர் சானியா பாத்திமா, தந்தை பெயர் பஷீர் என்று கூறினாள். அதன் பின்னர், அந்த சிறுமியை தூக்கிக் கொண்டு அந்தப் பகுதி முழுவதும் அவளது பெற்றோரை தேடி பாப்பாலால் அலைந்துள்ளார். ஆனால், பெற்றோர் கிடைக்கவில்லை.

அங்கிருந்த காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்துள்ளார். யாராவது குழந்தையைக் காணவில்லை என புகார் அளித்தால், தம்மை அணுகுமாறு கூறிவிட்டு சிறுமியை வீட்டுக்கு அழைத்து வந்தார். அன்று முதல், பாப்பாலாலும் அவரது மனைவி ஜெயஸ்ரீயும் சிறுமியை வளர்த்து வந்தனர். இந்நிலையில், சிறுமி வந்த சில காலங்களிலேயே, குழந்தை இல்லாத அந்தத் தம்பதிக்கு அடுத்தடுத்து 2 குழந்தைகள் பிறந்தன. எனவே, மகிழ்ச்சி அடைந்த தம்பதி சானியா பாத்திமாவை தொடர்ந்து வளர்த்து வருகின்றனர்.

இப்போது சானியா பாத்திமாவுக்கு 14 வயதாகிறது. ஆனால், சானியா பாத்திமாவை இவர்கள் வளர்ப்பது உறவினர்களுக்கும், அப்பகுதியில் உள்ள முஸ்லிம்களுக்கும் பிடிக்கவில்லை. இதனால், கடந்த 11 ஆண்டுகளாக சானியா பாத்திமாவை ஏதாவது ஒரு அநாதை விடுதியில் விட்டுவிடுமாறு இரு தரப்பைச் சேர்ந்தவர்களும் நிர்பந்தித்து வருகின்றனர். எனினும், இவற்றை கண்டுகொள்ளாமல் சானியா பாத்திமாவை தனது சொந்த மகள் போல பாப்பாலால் வளர்த்து வருகிறார்.

சில நாட்களுக்கு முன்பு, அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒரு தரப்பினர், பாப்பாலால் வீட்டுக்கே சென்று எச்சரித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, ஹைதராபாத் பாத்த பஸ்தி பகுதி காவல் நிலையத்தில் தங்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி பாப்பாலால், அவரது மனைவி ஜெயஸ்ரீ மற்றும் சானியா பாத்திமா ஆகியோர் புகார் அளித்தனர். அதன் பின்னர், அங்கிருந்த செய்தியாளர்களிடம் பாப்பாலால் கூறியதாவது:

பாதுகாப்பற்ற சூழலில் சிக்கித் தவித்த குழந்தையை மனிதாபிமானத்துடன் எடுத்து எங்கள் குழந்தையாக நினைத்து வளர்க்கிறோம். இதற்காக, கடந்த 11 ஆண்டுகளாக இரு மதத்தினரும் எங்களை மிரட்டி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஒரு தரப்பைச் சேர்ந்தவர்கள் என்னை கத்தியால் தாக்கி கொலை செய்ய முயற்சித்தனர். இதில் அதிருஷ்டவசமாக உயிர் தப்பினேன். என்ன நடந்தாலும், எங்கள் மகள் சானியா பாத்திமாவை நாங்கள் கைவிட மாட்டோம்.

இவ்வாறு கண்ணீர்மல்க பாப்பாலால் தெரிவித்தார்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீஸார், பாப்பாலாவை தாக்கியவர்களில் 2 பேரை நேற்று கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x