Last Updated : 28 Jul, 2018 08:40 AM

 

Published : 28 Jul 2018 08:40 AM
Last Updated : 28 Jul 2018 08:40 AM

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் 343 மருந்துகளை தடை செய்ய வேண்டும்: மத்திய அரசின் மருந்துக் குழு பரிந்துரை

இந்தியாவில் உற்பத்தியாகும் 343 கலவை மருந்துகளை (எப்.டி.சி.) தடை செய்ய மத்திய அரசின் மருந்து தொழில்நுட்ப ஆலோசனைக் குழு பரிந்துரை செய்துள்ளது.

எனவே, அந்த மருந்துகளின் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.

மருந்து தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் பரிந்துரையின் பேரில், கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் மாதம், மொத்தம் 349 வகை கலவை மருந்துகளுக்கு மத்திய அரசு தடைவிதித்தது. இதில் சளி, இருமல் மற்றும் நோய் எதிர்ப்பு மருந்துகள் இடம்பெற்றிருந்தன.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த மருந்துகளைத் தயாரிக்கும் நிறுவனங்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடுக்கப்பட்டன. அவற்றை விசாரித்த நீதிபதிகள், மருந்து தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவானது ஒரு துணைக்குழுவை அமைத்து 349 மருந்துகளுக்கான தடையை மறுபரிசீலனை செய்யுமாறு கடந்த டிசம்பர் மாதம் உத்தரவிட்டிருந்தது.

இதன்படி, ஆய்வு மேற்கொண்ட துணைக்குழு, அவற்றில் 343 மருந்துகளை தடை செய்ய தற்போது பரிந்துரைத்துள்ளது. இதில் பல்வேறு பெருநிறுவனங்கள் தயாரிக்கும் பல பிரபல மருந்துகளும் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில், இந்தப் பரிந்துரையை மருந்துகள் தொடர்பான பல்வேறு சமூக சேவை அமைப்புகள் வரவேற்றுள்ளன.

இதுகுறித்து, ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் அகில இந்திய மருந்து நடவடிக்கை அமைப்பின் இணை அமைப்பாளரான எஸ்.ஸ்ரீநிவாசன் கூறியதாவது:

2012-ம் ஆண்டு முதன்முறையாக எப்.டி.சி. மருந்துகள் மீதான நடவடிக்கையில் அதன் பாதுகாப்பு அறிக்கை கேட்கப்பட்டது. அதில், எப்டிசி மருந்துகளை நான்கு நிலைகளாகப் பிரித்த மருந்து தொழில்நுட்ப ஆலோசனைக் குழு, முதல்நிலையில் 344 மருந்துகளை தடை செய்தது.

சட்டவிதிமுறைகளின் படி, மத்திய அரசின் அனுமதி பெற்ற மருந்துகளை மட்டுமே மாநிலங்களில் தயாரிக்க அனுமதிக்க முடியும். ஆனால், மத்திய அரசின்

அனுமதி பெறாமலேயே சட்டவிரோதமாக மாநில அரசுகளிடம் அனுமதி பெற்று உற்பத்தி செய்வதால் இதுபோன்ற தவறான மருந்துகள் பெருகிவிட்டன எனத் தெரிவித்தார்.

மருந்துகளின் பல்வேறு தயாரிப்புகள் ஒரு வகையாக இருப்பது எப்.டி.சி. (Fixed Dose Combination) எனப்படும் கலவை மருந்துகள். இரண்டிற்கும் மேற்பட்ட நோய்களுக்கான மருந்துகளின் வேதிப்பொருளில் தயாரிக்கப்படும் ஒரு புதுவகையாக இந்தக் கலவை மருந்து உள்ளது. இவற்றில், பெரும்பாலான மருந்துகளினால், உடலுக்கு தீமை விளைவதாகக் கருதப்படுகிறது.

இதனால், இந்தக் கலவை வகை மருந்துகளை தயாரிக்க பெரும்பாலான சர்வதேச நாடுகள் அனுமதிப்பதில்லை. ஆனால், இந்தியாவில் இந்த வகை மருந்துகள் சுமார் 6,200 பயன்பாட்டில் உள்ளன. இவற்றை முறைப்படுத்த வேண்டி ‘மருந்து மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டம்’ மறுசீரமைக்கப்பட்டு 1988-ல் அமலுக்கு வந்தது.

ஆனால், அதன் பின்னரும், மத்திய அரசின் அனுமதி பெறாமல், நேரடியாக மாநில அரசுகளின் அனுமதியை சட்டவிரோதமாகப் பெற்று பல கலவை மருந்துகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. எனவே, இவற்றை ஆராய்ந்து தீமை விளைவிக்கும் மருந்துகளை இந்தியாவில் தடை செய்ய வேண்டும் என பல்வேறு அமைப்பு

கள் கடந்த 20 ஆண்டுகளாக போராடி வருகின்றன. இந்தியாவின் மொத்த மருந்துகளில் பெரும்பாலானவற்றை குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களே தயாரிக்கின்றன.

மீதியுள்ளவற்றை முறையே, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, உத்தராகண்ட் மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் உற்பத்தி செய்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x