Published : 12 Jun 2018 09:10 AM
Last Updated : 12 Jun 2018 09:10 AM

இருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம்: அசாமில் 19 பேர் கைது

அசாமில் குழந்தையை கடத்து வோர் என்ற சந்தேகத்தின் பேரில் இருவர் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவத்தில் 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பலரை தேடும் பணி தொடர்கிறது.

அசாமின் மேற்கு கார்பி ஆங்லாங் மாவட்டம், டொக்மோகா பகுதியில் குழந்தை கடத்தல்காரர்கள் நடமாட்டம் இருப்பதாக சமூக வலைதளங்களில் அண்மையில் வதந்தி பரவியது. இந்நிலையில் நிலோத்பல் தாஸ், அபிஜித் நாத் என்ற இரு நண்பர்கள் கடந்த வெள்ளிக்கிழமை இரவு இப்பகுதியில் உள்ள சுற்றுலா மையத்துக்கு சென்று விட்டு காரில் திரும்பும்போது, பஞ்சுரி என்ற கிராமத்தில் தடுத்து நிறுத்தப்பட்டனர். அதே மாநிலத்தைச் சேர்ந்த இவரும் குழந்தை கடத்தல்காரர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் அடித்துக் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில் அசாம் காவல்துறை செய்தித் தொடர்பாளர் நேற்று கூறும்போது, “இருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் இதுவரை 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தவிர சமூக வலைதளங்களில் வெறுப்புணர்வை ஏற்படுத்தும் தகவல்கள் மற்றும் ஆட்சேபத்திற்குரிய கருத்துகளைப் பரப்பியதாக, மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கூடுதல் டிஜிபி முகேஷ் அகர்வாலா, சம்பவ இடத்திலிருந்து கண்காணிப்பு பணி மேற்கொண்டுள்ளார். மேலும் பலரை தேடும் பணி தொடர்கிறது” என்றார்.

அசாம் டிஜிபி குலாதர் சைக்கியா நேற்று முன்தினம் கூறும்போது, “சமூக ஊடகங்களை போலீஸார் உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர். வதந்திகளைப் பொது மக்கள் நம்ப வேண்டாம். இது தொடர்பாக தகவல்களை உடனே போலீஸ் கவனத்துக்கு கொண்டுவர வேண் டும்” என்றார். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x