Last Updated : 04 Jun, 2018 05:36 PM

 

Published : 04 Jun 2018 05:36 PM
Last Updated : 04 Jun 2018 05:36 PM

3 நாட்கள் பட்டினியால் பலியான மூதாட்டி: நடையாய் நடந்தும் ரேஷன் கார்டு அளிக்காத மனிதாபிமானமற்ற அதிகாரிகள்

ஜார்க்கண்ட் மாநிலத்தின் கிரிதி பகுதியைச் சேர்ந்தவர் சாவித்ரிதேவி, இவருக்கு வயது 58. 3 நாட்கள் உணவில்லாமல் பட்டினி கிடந்து உயிரிழந்தார். காரணம் ரேஷன் கார்டு வேண்டி நடையாய் நடந்தும் அலட்சியம் காட்டிய மனிதாபிமானமற்ற அதிகாரிகள்.

இது குறித்து ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்துக்கு மாவட்ட அதிகாரி ஷீதல் பிரசாத் கூறியபோது, “அதிகாரிகளின் அலட்சியத்தினால் இந்தப் பெண்மணிக்கு ரேஷன் கார்டு அளிக்க முடியவில்லை. அதனால் அவர் உணவின்றி பலியாகியுள்ளார்” என்றார்.

சாவித்ரிதேவியின் மருமகள் சரஸ்வதி தேவி கூறிய போது, “கடந்த 3 நாட்களாக அவர் பட்டினி. நாங்களும் அவரைத் தொடர்பு கொள்ள முடியாததால் இந்த துயரம் ஏற்பட்டுள்ளது” என்றார்.

சாவித்ரி தேவியின் மகன்களும் சிறுசிறு வேலை செய்தே கொஞ்சம் சாப்பிடும் அளவுக்கு சம்பாதித்தனர். ஆனால் பெரும்பாலும் அக்கம்பக்கத்தினரிடையே யாசகம் கேட்டுத்தான் அவர்களும் வாழ்ந்ததாகத் தெரிகிறது, ஆனால் மகன்கள் பற்றிய முழு விவரம் கிடைக்கவில்லை.

இந்தப் பட்டினிச்சாவு குறித்து அந்தத் தொகுதி எம்.எல்.ஏ. ஜெகன்நாத் மாத்தோ, “இது மிகப்பெரிய கவலையளிக்கக் கூடிய சம்பவமாகும்” என்றவர் அலட்சியம் காட்டிய அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை என்று கூறவில்லை. இந்த விவகாரம் மாநில சட்டப்பேரவையில் எழுப்பப்படும் என்றார்.

உ.பி.யிலும் பட்டினிச்சாவு:

உத்தரப் பிரதேச மாநிலம் பரேலி பகுதியைச் சேர்ந்த ஷகினா ஆஷ்ஃபாக் இதே போல் பட்டினியால் இறந்ததாக 6 மாதங்களுக்கு முன்பு செய்திகள் வெளியாகின. இந்தச் சாவு இன்னும் கொடூரமானது. ஷகீனா ஆஷ்ஃபாக் முடக்குவாதம் ஏற்பட்டதால் இருந்த இடத்தை விட்டு நகர முடியாத நிலை. ஆதார் விரல் பதிவு சரியானதா என்பதைப் பரிசோதிக்க அவரால் நேரில் ரேஷன் கடைக்கு வர முடியவில்லை. இதனால் அவருக்கு ரேஷன் பொருட்கள் கிடைக்காமல் 50 வயது பெண் 5 நாட்கள் பட்டினி கிடந்து பலியானார்.

ஆனால் இதனை யோகி ஆதித்யநாத் அரசு ஏற்கவில்லை, அவர் உடல்நலக்குறைவினால் இறந்தார், பட்டினியினால் அல்ல என்று மறுத்தது. ஷகினாவிடம் ஏழைகளிலும் ஏழைகளாக வாழ்பவர்களுக்கான அந்தோதயா அன்ன யோஜனா அட்டை இருந்தது. ஆனால் விரல் ரேகையைச் சரிபார்க்க நேரில் சம்பந்தப்பட்டவர் வர வேண்டும் என்ற கொடூரமான நிபந்தனையினால் ஷகினா மறைந்தே போனார்.

இந்நிலையில் இன்னொரு பட்டினிச் சாவு அரசு அதிகாரிகளினால் நடந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x