Published : 15 Jun 2018 08:53 AM
Last Updated : 15 Jun 2018 08:53 AM

சத்தீஸ்கர் மாநிலத்தில் நலத்திட்டப் பணிகள் தொடக்கம்; வன்முறைக்கு வளர்ச்சியே சரியான தீர்வு- பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

வன்முறை செயல்களுக்கு வளர்ச்சி மட்டும்தான் சரியான தீர்வாக இருக்க முடியும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். நக்சல் ஆதிக்கம் நிறைந்த சத்தீஸ்கர் மாநிலத்தில் மோடி இவ்வாறு பேசியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஒருநாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். தலைநகர் ராய்ப்பூரில் உள்ள விமான நிலையத்தில் அவரை, சத்தீஸ்கர் முதல்வர் ரமண் சிங் உள்ளிட்ட அமைச்சர்கள் வரவேற்றனர்.

இதையடுத்து, சாலை மார்க்கமாக நயா ராய்ப்பூருக்கு சென்ற பிரதமர் மோடி, அங்கு மக்கள் சேவைகளை ஒருங்கிணைப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு மையத்தை திறந்து வைத்தார். அதன் பிறகு, ஹெலிகாப்டர் மூலமாக பிலாய் நகருக்குச் சென்ற அவர், அங்கு புதிதாக விரிவாக்கம் செய்யப்பட்ட நவீன உருக்கு ஆலையை நாட்டுக்கு அர்ப்பணித்தார். இதனைத் தொடர்ந்து, ராய்ப்பூர் - ஜகதல்பூர் இடையேயான விமான சேவையையும் மோடி தொடங்கி வைத்தார்.

இந்த சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக, பிலாய் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

நாட்டு மக்களின் வளர்ச்சிக் காக கடந்த நான்கு ஆண்டுகளில் பல்வேறு திட்டங்களை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு செயல்படுத்தியுள்ளது. பொதுமக்களுக்கு அவர்களின் வாழ்வாதாரம் குறித்து நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கான பணிகளை மத்திய அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இத்திட்டங்களால் கோடிக்கணக்கானோர் பயனடைந்துள்ளனர்.

எந்தவொரு பிரச்சினைக்கும் வன்முறை தீர்வாகாது. அது, பிரச்சினையின் வீரியத்தை அதிகப்படுத்துமே தவிர, அதனைக் குறைக்க உதவாது. வன்முறையை அதே வழியில் சென்று ஒடுக்குவதில் பாஜகவுக்கு என்றுமே உடன்பாடு இருந்ததில்லை. அனைத்து விதமான வன்முறைகளுக்கும், சதிச்செயல்களுக்கும் வளர்ச்சியே சரியான பதிலடியாக இருக்க முடியும்.

அந்த வகையில், சத்தீஸ்கரில் மாநில அரசும், மத்திய அரசும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைக் கொண்டு வந்துள்ளன. அவற்றை மக்கள் பயன்படுத்திக் கொண்டு முன்னேற வேண்டும். ஏனெனில், வளர்ச்சியும், முன்னேற்றமும் அடைந்த ஒரு சமூகத்தில் வன்முறைக்கு நிச்சயமாக இடம் இருக்காது. இவ்வாறு நரேந்திர மோடி பேசினார். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x