Published : 26 Jun 2018 04:40 PM
Last Updated : 26 Jun 2018 04:40 PM

ஸ்டெர்லைட் ஆலைக்கு பாபா ராம்தேவ் ஆதரவு: ‘தொழிற்சாலைகள் நாட்டின் கோயில்கள்,மூடக்கூடாது’

 

தொழிற்சாலைகள் நாட்டின் முன்னேற்றத்துக்கு கோயில்கள், அதை மூடக்கூடாது என்று ஸ்டெர்லைட் தாமிரஉருக்காலைக்கு ஆதரவாக, வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வாலைச் சந்தித்தபின், பாபா ராம் தேவ் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் செயல்பட்டுவந்த வேதாந்தா குழுமத்துக்கு சொந்தமான ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையால் சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படுகிறது, மக்களின் உடல்நலத்துக்கு பிரச்சினை ஏற்படுகிறதுஎனக் கூறி அப்பகுதிமக்கள் போராட்டம் நடத்தினார்கள். அந்த ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி 100 நாட்களாகப் போராட்டம் நடத்தினர்.

இறுதியில் 100-வது நாளில் மாவட்ட ஆட்சியரிடம் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மனுக்கொடுக்கச் சென்றபோது போலீஸாருக்கும், மக்களுக்கும் மோதல் வெடித்தது. இந்தக் கலவரத்தில் போலீஸார் தடியடிநடத்தி, துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள். இதில் 13 பேர் துப்பாக்கிச்சூட்டில் பலியானார்கள். இந்தச் சம்பவம் நாடுமுழுவதும் பரபரப்பானதையடுத்து, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடத் தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.அந்த ஆலைக்கு வழங்கப்பட்ட மின் இணைப்பையும் துண்டித்தனர்.

இந்நிலையில், சமீபத்தில் லண்டன் சென்றிருந்த யோகா குரு பாபா ராம் தேவ் வேதாந்தா குழுமத்தின் தலைவரும், ஸ்டெர்லைட் ஆலையின் நிறுவனருமான அனில் அகர்வாலையும், அவரின் மனைவியையும் சந்தித்துப் பேசினார். அதன்பின் பாபா ராம்தேவ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஸ்டெர்லைட் ஆலையின் பெயரைக் குறிப்பிடாமல் அதற்கு ஆதரவு தெரிவித்தள்ளார்.  மேலும், அனில் அகர்வாலுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

நான் லண்டன் சென்றிருந்தபோது, வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வாலைச் சந்தித்தேன். நம்நாட்டைக் கட்டமைக்கும் பணிக்காகவும், பொருளாதார வளர்ச்சிக்காகவும் லட்சக்கணக்கான மக்களுக்கு வேலை அளித்துவரும் அவரின் பங்களிப்புக்கு தலைவணங்குகிறேன்.

தென் இந்தியாவில் செயல்படும் வேதாந்தா குழுமத்துக்கு சொந்தமான நிறுவனத்தை மூடுவதற்காக அப்பாவி மக்களைப் பயன்படுத்தி, சில சர்வதேச சதிகாரர்கள் பிரச்சினைகளை உருவாக்கினார்கள். நாட்டின் வளர்ச்சிக்குத் தொழிற்சாலைகள்தான் கோயில்கள். அவை ஒருபோதும் மூடக்கூடாது

இவ்வாறு பாபா ராம் தேவ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x