Published : 18 Jun 2018 05:58 PM
Last Updated : 18 Jun 2018 05:58 PM

வளர்ச்சிக்காக விவசாயிகளின் நிலத்தைப் பறிப்பதுதான் மிகப்பெரிய அச்சுறுத்தல்: அனைத்திந்திய விவசாயிகள் சங்கத் தலைவர் வேதனை

 கடந்த 1991-ம் அண்டு கொண்டுவரப்பட்ட தடையில்லா வர்த்த்தக் கொள்கைகள் மூலம், கடந்த 25 ஆண்டுகளில் 4 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்று அனைத்திந்திய விவசாயிகள் சங்கத் தலைவர் அசோக் அதவாலே வேதனை தெரிவித்துள்ளார்.

மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கடந்த சில மாதங்களுக்கு முன் 50 ஆயிரம் விவசாயிகளைத் திரட்டி மும்பையை ஸ்தம்பிக்கச் செய்த போராட்டத்தை முன் நின்று நடத்தியவர்களில் முக்கியமானவர் இந்திய விவசாயிகள் சங்கத் தலைவர் அசோத் அதவாலே.

ஆந்திர மாநிலம், விஜயவாடாவில், மாகினேன் பசவபுன்னேயா இல்லத்தில் விவசாயிகளுக்கு மாநில அளவிலான பயிலரங்கு நடந்தது.

அதில் அசோத் அதவாலே பங்கேற்றுப் பேசியதாவது:

''நாட்டில் விவசாயிகளின் நிலைமையும், வேளாண்துறையும் மிகவும் மோசமான நிலையில் இருப்பதற்கான காரணங்களில் பெரும்பகுதி பங்கு காங்கிரஸ் கட்சிக்கு இருக்கிறது. ஆனால், மோடி அரசு முற்றிலும் விவசாயிகளுக்கு எதிரான அரசு. இந்திய வரலாற்றிலேயே விவசாயிகளுக்கு மிகவும் எதிரான அரசு என்றால், அது மோடி தலைமையிலான ஆட்சியாகத்தான் இருக்க முடியும்.

மத்தியில் காங்கிரஸ், பாஜக ஆகிய அரசுகள் மாறி மாறி ஆட்சிக்கு வந்தும் விவசாயிகள் நிலைமையை முன்னேற்ற எந்த அரசும் நடவடிக்கையும் எடுக்கவில்லை. நாட்டின் பிரதான துறையான வேளாண்துறை மிகுந்தஆபத்தில் இருப்பதை உணர்ந்து செயல்படவும் இல்லை.

காங்கிரஸ் கட்சியும், பாஜகவும், விவசாயிகளின் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையைக் காட்டிலும் கூடுதலாக 50 சதவீதம் அளிப்போம் என்று கூறுகிறார்கள். ஆனால், அதை ஒருபோதும் நிறைவேற்றவில்லை. ஏனென்றால், இரு கட்சியினருக்கும் விவசாயிகள் நிலைமை மீது உண்மையில் அக்கறை என்பது இல்லை. நிலத்தை நம்பி வாழ்ந்து வரும் விவசாயிகளிடம் இருந்து வளர்ச்சிச் திட்டம் என்ற பெயரில் நிலத்தை அபகரிப்பதுதான் விவசாயிகள் சந்திக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாகும்.

காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கும்போது, சிறப்பு பொருளாதார மண்டலம் என்ற பெயரில் நல்ல விளைச்சல் நிலங்களை விவசாயிகளிடம் இருந்து பறித்தது. மோடி தலைமையிலான அரசும் காங்கிரஸ் அரசு செய்ததைப் போலவே, தொழில் வளர்ச்சி என்ற பெயரில் நிலங்களை விவசாயிகளிடம் இருந்து பறிக்கிறது.

பரிதாபத்துக்குரிய விவசாயிகள் அரசு என்ன இழப்பீடு கொடுத்தாலும் அதை வாங்கிக்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டார்கள். மோடி தலைமையிலான அரசு தொழிலதிபர்களுக்கும், முதலாளிகளுக்கும் கோடிக் கணக்கில் கடன்களை அளிக்கிறது. அதில் பெரும்பகுதி வாராக்கடனாக மாறுகிறது. குறிப்பாக நிரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோர் கடனைப் பெற்று தப்பி ஓடிவிட்டார்கள்.

மோடி அரசுக்கு எதிராகவும், விவசாயிகளுக்கு எதிரான கொள்கைகளை கைவிடக்கோரியும், 10 கோடி விவசாயிகளிடம் இருந்து கையொப்பம் பெற்று அழுத்தம் கொடுக்கும் போராட்டம் வரும் செப்டம்பர் 5-ம் தேதி தொடங்கப்படும்.''

இவ்வாறு தவாலே தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x