Last Updated : 30 Apr, 2014 12:00 AM

 

Published : 30 Apr 2014 12:00 AM
Last Updated : 30 Apr 2014 12:00 AM

வெளிநாட்டு வங்கியில் கருப்புப் பணம் பதுக்கியுள்ள 26 பேர் பட்டியல் வெளியீடு: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல்

லிக்டென்ஸ்டைன் நாட்டின் வங்கியில் பணம் பதுக்கியுள்ள 26 இந்தியர்களின் பட்டியலை மத்திய அரசு சீல் வைக்கப்பட்ட உறையில் உச்ச நீதிமன்றத்திடம் தாக்கல் செய்துள்ளது.

சுவிட்சர்லாந்து மற்றும் அதன் அருகில் உள்ள லிக்டென்ஸ்டைன் நாடுகளில் உள்ள வங்கிகளில் இந்திய அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் கருப்புப் பணத்தை பதுக்கி வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இதுபோல் வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தை மீட்டு இந்தியாவுக்கு கொண்டுவர வேண்டும் என்று மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது 2009-ம் ஆண்டு லிக்டென்ஸ்டைனில் உள்ள எல்ஜிடி வங்கி மத்திய அரசிடம் தாக்கல் செய்துள்ள விவரங்களை ஏன் வெளியிடவில்லை என்று உச்ச நீதிமன்றம் கண்டித்தது.

இதையடுத்து நீதிபதிகள் ஹெச்.எல்.தத்து, ரஞ்சனா தேசாய், மதன் லோக்கூர் அடங்கிய அமர்வு முன்பு செவ்வாய்க்கிழமை வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் மோகன் பராசரன் இரண்டு சீல் வைக்கப்பட்ட உறைகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

எல்ஜிடி வங்கியில் இந்தியர்கள் 26 கணக்குகள் வைத்துள்ளனர். இதில் எட்டு கணக்குகளில் சட்ட விதிமீறல் எதுவும் இல்லை என்பதால் அந்த விவரங்கள் தனி உறையில் தாக்கல் செய்யப்பட்டது. எஞ்சியுள்ள 18 கணக்குகள் தனிநபர்கள், அறக்கட்டளைகளுக்கு சொந்தமானவை. அவை மற்றொரு உறையில் தாக்கல் செய்யப்பட்டன.

இதில் 18 பேரின் கணக்கு விவரங்கள் நீதிமன்ற உத்தரவுப்படி மனுதாரர் ராம் ஜெத்மலானிக்கு வழங்கப்பட்டு விட்டதாக மோகன் பராசரன் தெரிவித்தார். “இருநாட்டு வெளியுறவு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த விவரங்கள் பெறப்பட்டுள்ளன. அங்கிருந்து கிடைத்த விவரங்களை அப்படியே மனுதாரரிடம் பகிர்ந்துகொண்டால் அது இந்தியாவின் மதிப்பை கெடுத்துவிடும்; வெளியுறவையும் பாதிக்கும்” என்று அவர் வாதிட்டார்.

அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், “அதற்கு நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது. உங்களுக்கு கிடைத்த முழு விவரங்களையும் மனுதாரரிடம் வழங்க வேண்டும்” என்று உத்தரவிட்டனர். மோகன் பராசரன் வாதிடும்போது, “பணம் பதுக்கியுள்ள 18 பேரில் 17 பேர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை துவங்கிவிட்டது. ஒருவர் இறந்து விட்டார்” என்றார்.

“மத்திய அரசு வழங்கியுள்ள விவரங்கள் ஒரு நகைச்சுவை. சுவிட்சர்லாந்து வங்கியில் மட்டும் இந்தியர்கள் ரூ.90 லட்சம் கோடி பதுக்கி வைத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து தனியாக புதன்கிழமை மனு தாக்கல் செய்வோம்,” என்று ராம் ஜெத்மலானி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கருப்புப் பணத்தை மீட்க நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு தலைமை ஏற்க மூன்று நீதிபதிகளின் பெயர்களை பரிந்துரைக்கும்படி கடந்த விசாரணையின்போது உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டிருந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அனில் திவான், மூன்று நீதிபதிகள் அடங்கிய பட்டியலை சீல் வைக்கப்பட்ட உறையில் சமர்ப்பித்தார்.

குழுவின் தலைவராக இருக்க சம்மதம் தெரிவித்துள்ள நீதிபதி எம்.பி.ஷா தலைவராக நியமிக்கப்பட்டால் இந்த மூன்று பேரில் ஒருவரை துணைத் தலைவராக நியமிக்கலாம் என்று தெரிவித்தார்.

மத்திய அரசு தாக்கல் செய்துள்ள கருப்புப் பணம் பதுக்கியுள்ளவர்களின் பட்டியல் மற்றும் சிறப்பு புலனாய்வுக்குழு தலைவர் நியமனம் குறித்து மே 1-ம் தேதி (நாளை) விசாரணையின்போது முடிவு செய்யப்படும் என்று நீதிபதிகள் அறிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x