

இம்பால்: மணிப்பூர் தலைநகர் இம்பாலில் உள்ள முகாமில் இந்திய விமானப் படை சார்பில் தேசிய மாணவர் படையை (என்சிசி) சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இதன்படி பல்வேறு மாநிலங்களை சேர்ந்த என்சிசி மாணவ, மாணவிகளுக்கு இம்பாலில் 10 நாட்கள் சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டன.
மணிப்பூரில் மைதேயி, குகி சமுதாய மக்களிடையே நீண்ட காலமாக மோதல் நீடித்து வருகிறது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாக தேசிய நெடுஞ்சாலை 2-ல் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கி உள்ளது. இந்த சூழலில் என்சிசி மாணவ, மாணவிகளை சாலை மார்க்கமாக அவரவர் மாநிலங்களுக்கு அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டது.
இதையடுத்து இந்திய விமானப் படையின் ஏஎன்-32 ரகத்தை சேர்ந்த 3 விமானங்கள் மூலம் 132 என்சிசி மாணவ, மாணவிகள் இம்பாலில் இருந்து நேற்று அசாமின் குவாஹாட்டி நகருக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
அங்கிருந்து சாலை, ரயில் மார்க்கமாக அவரவர் மாநிலங்களுக்கு மாணவ, மாணவிகள் அனுப்பி வைக்கப்பட்டனர். மணிப்பூரில் சிக்கித் தவித்த என்சிசி மாணவ, மாணவியரை பத்திரமாக மீட்ட விமானப் படைக்கு அவர்களின் பெற்றோர் நன்றி தெரிவித்துள்ளனர்.