Published : 28 Jun 2018 08:42 AM
Last Updated : 28 Jun 2018 08:42 AM

எந்த நாடும் கால் பதிக்காத சந்திரனின் தென் பகுதியில் அணு எரிபொருள் ஆராயும் இஸ்ரோ: அக்டோபரில் விண்ணில் பாய்கிறது சந்திராயன்-2 விண்கலம்

இதுவரை எந்த ஒரு நாடும் கால் பதிக்காத சந்திரனின் தென் பகுதிக்கு விண்கலத்தை அனுப்ப இந்தியா திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் பல லட்சம் கோடி மதிப்புள்ள ஹீலியம் அணு எரிபொருள் இருக்கிறதா என ஆய்வு மேற்கொள்ளப்படும்.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) கடந்த 2008-ம் ஆண்டு சந்திராயன்-1 விண்கலத்தை அனுப்பியது. இதன்மூலம் சந்திரனில் தண்ணீர் இருந்ததற்கான ஆதாரம் முதல் முறையாக கிடைத்தது. இதைத் தொடர்ந்து இதுவரை எந்த ஒரு நாடும் கால் பதிக்காத சந்திரனின் தென்பகுதிக்கு வரும் அக்டோபர் மாதம் சந்திராயன்-2 விண்கலத்தை அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. அதில் அனுப்பப்பட உள்ள 6 சக்கரங்களைக் கொண்ட உளவு வாகனம் தரையில் இறங்கி 14 நாட்களுக்கு 400 மீட்டர் சுற்றளவில் ஆய்வுகளை மேற்கொள்ளும். சூரிய ஒளியில் இயங்கும் இது குறிப்பாக அங்கு தண்ணீர் மற்றும் ஹீலியம்-3 ஆகிய மூலப்பொருட்கள் கிடைப்பதற்கான அறிகுறிகள் தென்படுகிறதா என ஆய்வு செய்யும். இந்தத் திட்டத்தின் தொடர்ச்சியாக மனிதனை சந்திரனுக்கு அனுப்பவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து இஸ்ரோ தலைவர் கே.சிவன் கூறும்போது, “சந்திரனிலிருந்து ஹீலியம்-3 தனிமத்தைக் கொண்டுவர உலக நாடுகள் முயன்று வருகின்றன. இந்த முயற்சியின் ஒரு பகுதியாக இந்தியா இருப்பதை நான் விரும்பவில்லை. இந்த முயற்சிக்கு தலைமை தாங்கவே விரும்புகிறோம். இதற்காக சந்திரனுக்கு விண்கலத்தை அனுப்பத் தயாராக உள்ளோம்” என்றார்.

வரும் 2020-ல் ரூ.1.3 லட்சம் கோடி செலவில் சந்திரனுக்கு விண்கலத்தை அனுப்ப அமெரிக்காவின் நாசா திட்டமிட்டுள்ளது. ஆனால் இந்தியாவோ இந்த திட்டத்துக்கு வெறும் ரூ.850 கோடி செலவிட திட்டமிட்டுள்ளது.

ஹீலியம்-3 மிகவும் பாதுகாப்பான அணு எரிபொருளை உருவாக்க பயன்படுகிறது. இதிலிருந்து அபாயகரமான கழிவுப்பொருள் உருவாகாது என ஐரோப்பிய விண்வெளி அமைப்பு தெரிவித்துள்ளது. ஆனால் இது பூமியில் குறைவான அளவிலேயே உள்ளது. எனவே, சந்திரனில் ஹீலியம்-3 இருப்பது உறுதி செய்யப்பட்டால் அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என கருதப்படுகிறது.

சந்திரனில் ஹீலியம்-3 இருப்பது ஏற்கெனவே 1972-ல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்தது. அதாவது அங்கு 10 லட்சம் மெட்ரிக் டன் ஹீலியம் இருப்பதாகக் கருதப்படுகிறது. ஆனாலும் இதில் 4-ல் ஒரு பங்கை மட்டுமே பூமிக்குக் கொண்டுவர முடியும் என நாசா ஆலோசனை கவுன்சில் முன்னாள் உறுப்பினர் ஜெரால்டு தெரிவித்துள்ளார்.

அந்த 4-ல் ஒரு பங்கு (2.5 லட்சம் டன்) ஹீலியத்தைக் கொண்டு வந்தாலே உலக நாடுகளுக்கு 250 முதல் 500 ஆண்டுக்கு தேவையான எரிபொருள் தேவையை பூர்த்தி செய்ய முடியும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். 1 டன் ஹீலியத்தின் மதிப்பு சுமார் ரூ.34,500 கோடி. அந்த வகையில் 2.5 லட்சம் டன் ஹீலியத்தின் மதிப்பு பல லட்சம் கோடி என்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரம் இதை எரிபொருளாக மாற்றுவது மிகவும் சவாலான விஷயம் என்றும் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x