Published : 15 Jun 2018 08:49 AM
Last Updated : 15 Jun 2018 08:49 AM

டன் கணக்கில் மலைபோல் தேங்கிய குப்பையை அகற்ற போராட்டக் களத்தில் குதித்த கேரள நீதிபதி: 12 லோடு கழிவுகளை அகற்றிய அதிகாரிகள்

கேரள மாநிலம், எர்ணாகுளம் மார்கெட் பகுதியில் மலைபோல் குவிந்திருந்த குப்பையை அகற்ற வலியுறுத்தி நீதிபதி ஒருவர் போராட்டத்தில் குதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

எர்ணாகுளம் மார்க்கெட்டில் உள்ள மொத்த வியாபாரிகள் லைசன்ஸ் நிலவரம் பற்றி ஆய்வு செய்வதற்காக, துணை நீதிபதியும் மாவட்ட சட்டசேவை ஆணையத்தின் செயலாளருமான ஏ.எம்.பஷீர் கடந்த செவ்வாய்க்கிழமை சென்றார்.

அப்போது மார்க்கெட் பகுதியில் குப்பைகள், காய்கறிக் கழிவுகள், இறைச்சிக் கழிவுகள் மலைபோல் கொட்டப்பட்டு அந்தப் பகுதியே துர்நாற்றம் வீசியது. இதைப் பார்த்த பஷீர் உடனடியாக அவற்றை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் குப்பைகளை அகற்றும் வரை இங்கிருந்து செல்ல மாட்டேன் என்று கூறி சாலையில் நாற்காலி போட்டு அமர்ந்துவிட்டார்.

துணை நீதிபதி போராட்டத்தில் ஈடுபடுவதை அறிந்த நகராட்சி அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்து விரைந்து வந்தனர். பின்னர் அங்கிருந்த குப்பைகளை அள்ளும் பணியை துரிதப்படுத்தினர். இந்தப் பணி முடிந்த பின்னரே அந்த இடத்தை விட்டு நகர்ந்தார் பஷீர். இவரது போராட்டத்தை தொடர்ந்து அப்பகுதியில் கடந்த சில நாட்களாக 12 லோடு குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன.

இதுகுறித்து துணை நீதிபதி பஷீர் கூறியதாவது:

இந்தப் பகுதியில் குப்பை கொட்டக் கூடாது என்று நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவையும் மீறி குப்பைகளை மலைபோல் கொட்டி வைத்துள்ளனர். இந்தப் பகுதியில் ஒரு பள்ளிக்கூடம் உள்ளது. குப்பைகள் தேங்குவதால் மாணவிகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகார் மீது நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. ஏறக்குறைய 2 மணி நேரம் நான் அமர்ந்து போராட்டம் நடத்தியதைப் பார்த்து குப்பையை அள்ளுவதை அதிகாரிகள் துரிதப்படுத்தினர். இந்தப் பகுதியில் முறையாக நாள்தோறும் குப்பை அள்ளுவதாக உறுதி அளித்தனர்.

நகரில் மொத்தம் 30 இடங்களை பொது குப்பை கொட்டும் தளமாக மக்கள் மாற்றியுள்ளனர். அவற்றை கண்டறிந்து அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளேன். அதில் முதல்கட்டம்தான் இந்த மார்க்கெட் பகுதி” என்றார்.

இதனிடையே குப்பைகளை முறையாக அள்ளாமல் பணியில் கவனக்குறைவாக இருந்ததாக ஊழியர்கள் பலருக்கு மேயர் சவுமினி ஜெயின் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x