Last Updated : 06 Jun, 2018 12:02 PM

 

Published : 06 Jun 2018 12:02 PM
Last Updated : 06 Jun 2018 12:02 PM

பயணிகளுக்கு எச்சரிக்கை: ரயிலில் கூடுதல் லக்கேஜ் எடுத்து வந்தால், 6 மடங்கு அபராதம்

விமானப்பயணத்தில் நடைமுறையில் இருப்பதுபோல், ரயில் பயணத்திலும், கூடுதல் லக்கேஜ் எடுத்துவந்தால், பயணிகளுக்கு 6 மடங்கு அபராதம் விதிக்கப்படும் என்று ரயில்வே துறை எச்சசரித்துள்ளது.

இந்த விதிமுறை ரயில்வேயில் கடந்த 30 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்தாலும், அதை ரயில்வே தீவிரமாக எந்த அதிகாரியும் கடைப்பிடிக்கவில்லை. ஆனால், இதை இப்போது தீவிரமாக அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

ரயில் 2-ம் வகுப்பு மற்றும் ஏசி பெட்டியில் பயணிக்கும் பயணிகள் அளவுக்கு அதிகமாக லக்கேஜ்களை எடுத்துவந்து, மற்ற பயணிகளுக்கும் இடையூறு அளிக்கிறார்கள் என்று புகார்கள் தொடர்ந்து ரயில்வேதுறைக்கு வந்தன. இதையடுத்து, இந்த விதிமுறையை மீண்டும் தீவிரமாக அமல்படுத்த ரயில்வே முடிவு செய்துள்ளது. இதன்படி, ஒரு பயணி ரயில்வே நிர்ணயித்த அளவைக் காட்டிலும் கூடுதலாக லக்கேஜ் எடுத்துவந்தது கண்டுபிடிக்கப்பட்டால் அந்தப் பயணிக்கு லக்கேஜ் கட்டணத்தைக் காட்டிலும் 6 மடங்கு அபராதம் விதிக்கப்படும்.

இதன்படி ரயில்வே விதித்துள்ள விதிமுறைகளின்படி, 2-ம் வகுப்பு படுக்கையில் பயணிக்கும் பயணி ஒருவர் எந்தவித கூடுதல் கட்டணமின்றி 40 கிலோ லக்கேஜ்ஜும், 2-ம் வகுப்பு அமரும் வசதியில் பயணிக்கும் பயணி ஒருவர் 35 கிலோ லக்கேஜும் உடன் எடுத்து வரலாம்.

அதேசமயம், படுக்கை வசதியில் பயணிக்கும் பயணி கூடுதலாக 80 கிலோவரையிலும், இருக்கையில் பயணிக்கும் பயணி அதிகபட்சமாக 75 கிலோ வரையிலும் கட்டணம் செலுத்தி எடுத்து வரலாம். இந்தக் கூடுதல் லக்கேஜ்ஜை ரயிலின் லக்கேஜ் வேனில் வைக்க வேண்டும்.

இதே போல ஏசி 2அடுக்கு பெட்டியில் பயணிக்கும் பயணி ஒருவர் இலவசமாக தன்னுடன் 50 கிலோ லக்கேஜும், கட்டணம் செலுத்தி அதிகபட்சமாக கூடுதலாக 50 கிலோ வரை லக்கேஜும் எடுத்துவரலாம். அந்த லக்கேஜ்ஜை லக்கேஜ் வேனில் வைக்க வேண்டும். அதேபோல, ஏசி முதல்வகுப்பில் பயணிக்கும் பயணி ஒருவர் 70 கிலோ வரை இலவசமாகவும், கட்டணம் செலுத்தில கூடுதலாக 70 கிலோவும் எடுத்து வரலாம்.

மேலும், பயணிகள் தங்களுடன் வைத்திருக்கும் சூட்கேஸ், டிரங்க், பெட்டிகள் போன்றவை 100 செ.மீ நீளம், 60 செ.மீ அகலம், 25 செமீ. உயரத்தில் மட்டுமே இருக்க வேண்டும்.

இந்த விதிமுறையை அனைத்து ரயில்நிலை அதிகாரிகளும், டிக்கெட் பரிசோதகர்களும் ஜுன் 1-ம் தேதி முதல் தீவிரமாக கடைபிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இது குறித்து ரயில்வே வாரியத்தின் தகவல் மற்றும் விளம்பரத்துறை இயக்குநர் வேத் பிரகாஷ் கூறுகையில், ‘ரயில்வேயில் கூடுதல் லக்கேஜ்களை கொண்டுவரும் பயணிகளுக்கு அபராதம் விதிக்கும் முறை ஏற்கனவே இருக்கிறது. ஆனால், அதே இப்போதுதான் தீவிரமாக நடைமுறைப்படுத்த இருக்கிறோம்.

பயணிகள் நிர்ணயிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் லக்கேஜ்களை எடுத்துவந்தால், அவர்களுக்கு 6 மடங்கு அபராதம் விதிக்கப்படும். கூடுதல் லக்கேஜ்களை கட்டணத்துடன் லக்கேஜ் வேனில் வைக்க வேண்டும். விமானநிலையத்தில் இருப்பதுபோல், பயணிகளின் உடைமைகள் அவ்வப்போது எடைபோட்டுச் சோதிக்கப்படும் கூடுதல் எடை இருந்தால், அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்’ எனத் தெரிவித்தார்.

உதாரணமாக, ஒரு பயணி 500 கி.மீ 2-ம் வகுப்பில் பயணிக்கிறார் என்றால், 80 கிலோ லக்கேஜ் வரை எடுத்துவரலாம். அவர் கூடுதலாக 40 கிலோ லக்கேஜ் வைத்திருந்திருந்தால், ரூ.109 கட்டணம் செலுத்தி லக்கேஜ் வேனில் வைத்துவிட வேண்டும்.

ஒருவேளைக் கூடுதல் லக்கேஜ்ஜையும் அந்தப் பயணி தன்னுடன் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டால், அவருக்கு ரூ. 654 அபராதமாக அதிகாரிகளால் விதிக்க முடியும். இந்த மாதம் 1-ம் தேதி முதல் அனைத்து நாடுமுழுவதும் ரயில்நிலையங்களிலும் இதை தீவிரமாக நடைமுறைப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x