Last Updated : 17 Jun, 2018 07:58 PM

 

Published : 17 Jun 2018 07:58 PM
Last Updated : 17 Jun 2018 07:58 PM

‘என் சகோதரரை கொலை செய்ய பாஜக எம்.பி. கமலேஷ் பாஸ்வான் சதி’: டாக்டர் கபீல்கான் பரபரப்பு குற்றச்சாட்டு

என் சகோதரரை கொலை செய்ய, பாஜக எம்.பி. கமலேஷ் பாஸ்வான்தான் கூலிப்படையினரை ஏவியுள்ளார் என்று டாக்டர் கபீல்கான் பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம், கோரக்பூரில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனையில் ஆக்சிஜன் சிலிண்டர் இல்லாமல் குழந்தைகள் இறந்தநிலையில், தனது சொந்த செலவில் சிலிண்டர் வாங்கி 63 குழந்தைகளைக் காப்பாற்றியவர் டாக்டர் கபீல்கான். ஆனால், அங்கு அந்த மாநிலத்தில் ஆளும் பாஜக அரசு அவர்மீது கவனக்குறைவாக பணியில் இருந்ததாகக் கூறி வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தது. 9 மாதங்கள் சிறைவாசத்துக்கு பின் கடந்த மாதம் ஜாமீனில் வெளியே வந்தார்.

இந்நிலையில், கடந்த 10-ம் தேதி கோரக்பூரில் கோரக்நாதர் கோயில் அருகே வந்து கொண்டிருந்த டாக்டர் கபீல்கானின் சகோதரர் காசிப் ஜமீல் வந்து கொண்டிருந்தார். அப்போது, பைக்கில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் இருவர் பைக்கில் ஜமீலை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றனர்.

இதையடுத்து அப்பகுதியில் இருந்தவர்கள் போலீஸாருக்கு தகவல் அளித்தனர். அங்கு வந்த போலீஸார், 2 மணிநேரம் தாமதமாக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அதன்பின் மருத்துவமனையில் ஜமீலுக்கு நடத்தப்பட்ட அறுவை சிகிச்சையில் அவர் உடலில் இருந்து துப்பாக்கி குண்டுகள் அகற்றப்பட்டு உயிர்பிழைத்தார்.

இது குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால், இதுவரை ஒருவரும் கைது செய்யப்படவில்லை.

இந்நிலையில், தனது சகோதரர் துப்பாக்கிச்சூடு குறித்து டாக்டர் கபீல்கான் இன்று ஊடகங்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

பாஜக எம்பி. கமலேஷ் பாஸ்வானுக்கும், பல்தேவ் பிளாசாவின் உரிமையாளர் சதீஸ் நங்காலியா ஆகியோர் கூலிப்படையினரை ஏவி என் சகோதரர் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். பாஸ்வானுக்கும், என் சகோதரருக்கும் எந்தவகையான முன்விரோதமும் இல்லை.

கடந்த பிப்ரவரி மாதம் என்னுடைய மாமாவிடம் இருந்த நிலத்தைக் கேட்டு கமலேஷ், சதீஸ் ஆகியோர் தகராறு செய்தனர். இதில் இருவர் மீதும் போலீஸில் புகார் செய்யப்பட்டு, எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. ஆனால், உயர் நீதிமன்றம் மூலம் கைது செய்யத் தடை பெற்றனர்.

என் சகோதரரை சுட்டவர்களை 48 மணிநேரத்தில் பிடித்துவிடுவோம் எனக் கூறினார்கள் ஆனால், பிடிக்கவில்லை. உத்தரப்பிரதேச போலீஸார் யாரோ சிலரின் உத்தரவுகளின் அடிப்படையில் பணியாற்றுகிறார்கள் என்றே எனக்குத் தோன்றுகிறது. என் சகோதரரை சுட்டவிவகாரத்தில் சிபிஐ விசாரணை கோர உள்ளோம்.அல்லது உயர் நீதிமன்ற நீதிபதி விசாரணை நடத்தவேண்டும். உபி போலீஸார் விசாரிப்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை.

இவ்வாறு டாக்டர் கபீல்கான் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x