Published : 16 Jun 2018 08:14 AM
Last Updated : 16 Jun 2018 08:14 AM

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு; 7 குற்றவாளிகளை விடுவிக்க முடியாது: தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்தார் குடியரசுத் தலைவர்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கின் 7 குற்றவாளிகளை விடுவிக்க கோரும் தமிழக அரசின் மனுவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்துள்ளார்.

கடந்த 1991-ம் ஆண்டு மே 21-ம் தேதி சென்னை அருகேயுள்ள ஸ்ரீபெரும்புதூரில் நடந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கை விசாரித்த பூந்தமல்லி தடா நீதிமன்றம் 26 பேருக்கு மரண தண்டனை விதித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், முருகன், நளினி, சாந்தன், பேரறிவாளன் ஆகிய 4 பேரின் மரண தண்டனையை உறுதி செய்தது. ராபர்ட் பயாஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன் ஆகிய 3 பேரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தது. இதர 19 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

பின்னர் கடந்த 2000-ம் ஆண்டில் நளினியின் மரண தண்டனையை அப்போதைய தமிழக ஆளுநர் பாத்திமா பீவி மனிதாபிமான அடிப்படையில் ஆயுள் தண்டனையாகக் குறைத்தார். முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் குடியரசுத் தலைவருக்கு கருணை மனுக்களை அனுப்பினர். சுமார் 11 ஆண்டுகள் கால தாமதத்துக்குப் பிறகு அந்த மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

உச்ச நீதிமன்றம் கெடு

இந்த முடிவை எதிர்த்து அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டனர். கடந்த 2014-ம் ஆண்டில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் மரண தண்டனையை ஆயுளாகக் குறைத்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு, ராஜீவ் கொலை வழக்கின் 7 குற்றவாளிகளையும் விடுதலை செய்ய முடிவு எடுத்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தொடர்ந்த வழக்கு அரசியல் சாசன அமர்வு முன்பு நிலுவையில் உள்ளது. தமிழக அரசு தாக்கல் செய்த மனுவும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

ராஜீவ் கொலையாளிகளை விடுவிக்கக் கோரி தமிழக அரசு சார்பில் மத்திய அரசுக்கு கடிதங்கள் அனுப்பப்பட்டன. அதற்கு மத்திய அரசு பதில் அளிக்கவில்லை. இதனிடையே தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு சில மாதங்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது 7 குற்றவாளிகளையும் விடுவிப்பது தொடர்பாக தமிழக அரசு அனுப்பிய கடிதத்தின் மீது மூன்று மாதங்களுக்குள் முடிவு எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கெடு விதிக்கப்பட்டது.

குடியரசுத் தலைவர் நிராகரிப்பு

இதைத் தொடர்ந்து 7 குற்றவாளிகளின் உடல்நிலை, குடும்ப சூழல், பொருளாதார பின்னணி குறித்த விவரங்களை கோரி தமிழக அரசுக்கு மத்திய அரசு அண்மையில் கடிதம் அனுப்பியது. இதற்கு தமிழக அரசு உரிய பதில் அளித்தது. தமிழக அரசு அனுப்பிய 7 குற்றவாளிகள் தொடர்பான தகவல்கள், வழக்கு விவரங்களை மத்திய உள்துறை அமைச்சகம் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு அனுப்பி வைத்தது.

இதனை பரிசீலித்த குடியரசுத் தலைவர், ராஜீவ் கொலை வழக்கின் 7 குற்றவாளிகளையும் விடுதலை செய்ய முடியாது என்று கூறி தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்தார். “ராஜீவ் கொலையாளிகள் விவகாரத்தில் தமிழக அரசின் கருத்தோடு மத்திய அரசு ஒத்துப் போகவில்லை. மத்திய அரசின் பரிந்துரைபடியே முடிவு எடுக்கப்பட்டது” என்று தமிழக அரசுக்கு குடியரசுத் தலைவர் விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து மத்திய அரசு உயரதிகாரி ஒருவர் கூறியபோது, “மத்திய உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையின்படி தமிழக அரசின் கோரிக்கையை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்துள்ளார். இந்த தகவல் தமிழக அரசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x