Published : 12 Aug 2014 06:17 PM
Last Updated : 12 Aug 2014 06:17 PM

வெளிநாடுகளில் சீக்கியர்களுக்கு பாதுகாப்பு இல்லை: மாநிலங்களவையில் பஞ்சாப் எம்.பி.க்கள் கவலை

அமெரிக்கா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில், சீக்கியர்கள் மீதான தொடர் தாக்குதல் குறித்து பஞ்சாபை சேர்ந்த எம்.பி.க்கள் கவலைத் தெரிவித்தனர். அவர்களது பாதுகாப்பை உறுதி செய்ய பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

அமெரிக்கா மற்றும் பாகிஸ்தானில் சீக்கியர்கள் மீதான தாக்குதலுக்கு பஞ்சாப் மாநில எம்.பி.க்கள் மாநிலங்களவையில் வேதனை தெரிவித்தனர்.

இவ்விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட்டு அந்தந்த நாடுகளை சீக்கியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்ள வேண்டுமென்று அவர்கள் வலியுறுத்தினர்.

அமெரிக்கா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இடம்பெயர்ந்து வாழும் சீக்கியர்கள் மீது தொடர் தாக்குதல்களும் இன ரீதியான துன்புறுத்தல்களும் தொடர்கின்றன. இந்த நிலையில், இது குறித்து மாநிலங்களவையில் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த எம்.பி.க்கள் தங்களது கோரிக்கைகளை முன்வைத்தனர்.

ஷிரோமணி அகாலி தளத்தின் எம்.பி. பல்வீந்தர் சிங் பந்தர் பேசும்போது, " அமெரிக்கா மற்றும் பாகிஸ்தானில் வசிக்கும் சிறுபான்மை சீக்கியர்கள் இன ரீதியிலான துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர். சீக்கியர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல்களும், கொலைச் சம்பவங்களும் நடக்கின்றன.

இவர்கள் மீதான தாக்குதல்கள் இங்கிருக்கும் சீக்கியர்களின் உள்ளத்தையும் காயமடைய செய்கிறது. எந்நேரமும் அந்த நாடுகளில் இருக்கும் சொந்தங்கள் குறித்து கவலை எழுந்துக்கொண்டே இருக்கிறது.

இந்தப் பிரச்சினை தொடர்பாக பிரதமர் மோடி தலையிட்டு, இரு நாடுகளின் கவனத்திற்கும் இட்டுச்சென்று சீக்கியர்களுக்கு பாதுகாப்பு வழங்க வழிவகை செய்ய வேண்டும்" என்றார்.

இதனையே வலியுறுத்திய பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த அவ்தார் சிங் கரிம்பூரி, "அமெரிக்கா, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான், கனடா ஆகிய நாடுகளில் வாழும் சீக்கியர்கள் மீது வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான தாக்குதல்கள் நடக்கின்றன. அவர்களை இழிவுப்படுத்தும் சம்பவங்களும் படுகொலைகளும் நடக்கின்றன. இதனை அரசு கண்டும் காணாமல் இருப்பது ஏன்? இதனை வேடிக்கை பார்க்கதான், அரசு இயங்குகிறதா? " என்று கேள்வி எழுப்பினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x