Last Updated : 21 Aug, 2014 09:30 AM

 

Published : 21 Aug 2014 09:30 AM
Last Updated : 21 Aug 2014 09:30 AM

பாக். தீவிரவாதிகளுக்கு பிஹாரிலிருந்து கள்ளத் துப்பாக்கிகள்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்

பாகிஸ்தானின் தீவிரவாத இயக்கமான ஹிஜ்புல் முஜாகிதீன் அமைப்புக்கு, பிஹாரின் முங்கேர் பகுதியில் இருந்து துப்பாக்கிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த திடுக்கிடும் தகவல், கடந்த வாரம் கைதான ஆயுதக் கடத்தல்காரர்களிடம் நடத்திய விசாரணையில் வெளியாகி உள்ளது.

கடந்த ஆகஸ்ட் 12-ம் தேதி பர்தானா கிராமத்தில் பிஹாரின் தீவிரவாத தடுப்பு கண்காணிப்பு படையினருடன் இணைந்து மாநில போலீஸார் நடத்திய திடீர் சோதனை யில் அருண்குமார், சுரேந்தர் பாஸ் வான் மற்றும் ஜம்ஷெட் ஆலம் ஆகிய மூன்று பேர் சிக்கினர். இவர்களிடம், நான்கு கள்ள கைத்துப்பாக்கிகள், ஆறு மொபைல்கள் மற்றும் ரூ. 50,000 ரொக்கம் கிடைத்தது.

இது குறித்து ‘தி இந்து’விடம் பிஹார் போலீஸார் கூறியதாவது:

முங்கேரில் செய்யப்பட்ட துப்பாக்கிகள், பஞ்சாப் வழியாக பாகிஸ்தானுக்கு ரயிலில் கடத்தப் படுகின்றன. இதை ஹிஜ்புல் முஜாகிதீன் உட்பட பல தீவிரவாத அமைப்புகள் பெற்று வருகின்றன. அதற்கான விலை வங்கிகள் மூலம் பரிவர்த்தனை செய்யப்பட் டுள்ளது என விசாரணையில் தெரியவந்திருக்கிறது’ என்றனர்.

பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு வெளிநாடுகளில் இருந்து நவீன ஆயுதங்கள் கிடைக்கின்றன. எனினும், முங்கேரின் ஆயுதங்கள், குறைவான விலையில் நல்ல தரத்துடன் இருப்பதால் அவற் றுக்கு பாகிஸ்தானில் நல்ல வரவேற்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.

பாகிஸ்தானில் இருந்து முங் கேருக்கு அடிக்கடி வந்த சாட்லைட் தொலைபேசி அழைப்புகள் கண்காணிக்கப்பட்டு, பர்தானாவில் நடத்தப்பட்ட சோதனையில் அந்த மூவரும் பிடிபட்டனர். இதில், ஜம்ஷெட் மற்றும் சுரேந்தர் பாஸ்வான் ஆகிய இருவரும் முங்கேரை சேர்ந்தவர்கள். அருண், உத்தரப்பிரதேச மாநிலம் பைசாபாத்தை சேர்ந்தவர்.

ஜம்மு-காஷ்மீரில் பிடிபடும் தீவிரவாதிகளிடம் முங்கேரின் ஆயுதங்கள் பலமுறை பிடிபட்டது உண்டு. ஆனால், அவைகளை அனுப்பும் ஆயுதக் கடத்தல்காரர்கள் பிடிபட்டிருப்பது இதுவே முதன்முறை எனக் கருதப்படுகிறது.

முங்கேரின் துப்பாக்கி வரலாறு

18-ம் நூற்றாண்டில் வங்காளத்தை ஆட்சி செய்த நவாப் சிராஜ்-உத்-தௌலாவின் படைத் தளபதியான மீர்காசிம் முங்கேரில் இருந்தார். அப்போது முங்கேரில் தாம் கட்டிய கோட்டையில் ஆயுதங்களையும் செய்வதற்காக ஆப்கானில் இருந்து ஆட்களை கொண்டு வந்தார் காசிம். பிறகு, ஆங்கிலேயர்களும் தொடர்ந்த இந்த துப்பாக்கி தொழிற்சாலையில் தற்போது 34 யூனிட்கள் மட்டும் மத்திய அரசின் கீழ் இன்றும் இயங்கி வருகின்றன. முதலாம் உலகப் போரின்போதுதான் முங்கேரில் துப்பாக்கி தயாரிப்புகள் முதன் முதலில் வெளி உலகிற்கு தெரியவந்தன.

1962-ல் வந்த சீனப்போரின் போது நம் இராணுவத்திற்கு அதிகமாக தேவைப்பட்ட ‘410 போர்’ அளவுள்ள துப்பாக்கிகள் முங்கேரின் துப்பாக்கி தொழிற்சாலையில் தயாராயின. அந்த தொழிலை கற்றுத் தேர்ந்தவர்கள் இன்றும் வழி, வழியாக அப்பணியில் ஈடுபடுகின்றனர். இவர்களில் வேலை கிடைக்காதவர்கள் மற்றும் அதிக பணம் சம்பாதிக்கும் ஆசையுள்ளவர்களும் சட்ட விரோதமாக கள்ளத்துப்பாக்கிகள் தயாரிக்கும் தொழிலில் இறங்கி விட்டனர்.

இதனால், நம் நாட்டிலேயே முங்கேர்தான் முதன் முதலில் குடிசை தொழிலாக துப்பாக்கிகள் தயாரிக்கும் மாவட்டம் ஆனது. தொடக்க காலங்களில் பிஹாரில் மட்டும் விநியோகிக்கப்பட்டு வந்த இந்த துப்பாக்கிகள் பின்னர் வெளிமாநிலங் களுக்கும் அனுப்பப்பட்டன. இதில் முன்னேற்றம் காணும் வகையில், நவீனரக கள்ளத்துப்பாக்கிகளும் தயாரிக்கப்பட்டு நக்சலைட்டுகள் மற்றும் பாகிஸ்தான் தீவிரவாத குழுக்களுக்கும் விற்பனை செய்யப்படுகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x