Last Updated : 17 Jun, 2018 09:21 AM

 

Published : 17 Jun 2018 09:21 AM
Last Updated : 17 Jun 2018 09:21 AM

உலகத் தமிழ்ப் பண்பாட்டு மாநாடு பெங்களூருவில் குவிந்த அறிஞர்கள்: களை கட்டியது நாட்டுப்புற நடனம், பாடல்கள்

உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் 13-வது மாநாடு பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் இலங்கை, மலேசியா, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த தமிழ் அமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் 13-வது மாநாடு, பெங்களூருவில் உள்ள தமிழ்ச்சங்கத்தில் நேற்று காலை 9 மணிக்கு தொடங்கி, இரவு 9 மணி வரை நடைபெற்ற‌து. இயக்கத்தின் கர்நாடக கிளை தலைவர் பேராசிரியர் ராமமூர்த்தி தலைமையில் நடைபெற்ற மாநாட்டில் மலேசிய தலைவர் ப.கு.சண்முகம், ஆசிய ஒன்றிய மாநாட்டு ஒருங்கிணைப்பாளர் இரா.மதிவாணன், அனைத்திந்திய தமிழ்ச்சங்க‌ பேரவை தலைவர் மீனாட்சி சுந்தரம், பெங்களூரு தமிழ்ச்சங்கத் தலைவர் தி.கோ. தாமோதரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

புலவர் வெற்றியழகன் தலைமையில் நடந்த கவியரங்கத்தில் கவிஞர்கள் மருது, கொ.சி.சேகர், பா.மூர்த்தி உள்ளிட்டோர் “சங்க காலத் தமிழ்ப் பண்பாடு” என்ற தலைப்பில் கவிதை வாசித்தனர். முனைவர் ப.மகாலிங்கம் தலைமையில் நடந்த கருத்தரங்கத்தில் அனைத்திந்திய தமிழ்ச் சங்க பேரவையின் தலைவர் மீனாட்சி சுந்தரம் “தமிழரின் விருந்தோம்பல்” என்ற தலைப்பிலும், முனைவர் பா. பானுமதி “தமிழரின் அறிவியல்” என்ற தலைப்பிலும், முனைவர் லலிதா சுந்தரம் “தமிழரின் உலகக் கண்ணோட்டம்” என்ற தலைப்பிலும் கருத்துரை ஆற்றினர். முனைவர் நித்திய கல்யாணி தலைமையில் நடந்த ஆய்வரங்கத்தில் பேரா.எஸ்.இராஜசேகரன் “தமிழரின் வரலாறு” என்ற தலைப்பிலும், குறும்பட இயக்குநர் அமலன் ஜெரோம் “தொடக்கக் கல்வியில் தமிழின் பங்கு” என்ற தலைப்பிலும் உரையாற்றினர்.

இந்த இயக்கத்தின் மலேசிய தலைவர் ப.கு.சண்முகம் தலைமையில் நடந்த அயலகத் தமிழ் முற்றம் எனும் அரங்கில் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த மிக்கி செட்டி, ராதா பிள்ளை, மேஸ்திரி ஆகியோர் பங்கேற்று உரையாற்றினர். நிறைவாக, தமிழ் சமூகத்துக்கு பங்காற்றிய சான்றோருக்கு தமிழ் பண்பாட்டுக் காவலர் விருது வழங்கப்பட்டது. விருதினை கர்நாடக உலகத் தமிழ் கழகத்தைச் சேர்ந்த தங்கவயல் தென்னவன், சி.பூ.மணி, மலேசிய கவிவாணர் ஐ.உலகநாதன் உள்ளிட்டோர் பெற்றுக் கொண்டனர். இதையடுத்து, தமிழ்ப் பண்பாட்டை விளக்கும் நாட்டுப்புற நடனம், பாடல் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.

மாநாட்டில் பெங்களூருவை சேர்ந்த தமிழ் அமைப்பினர் மட்டுமல்லாமல் இலங்கை, மலேசியா, தென்னாப்பிரிக்கா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றது குறிப்பிடத் தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x