Published : 05 Aug 2014 11:02 AM
Last Updated : 05 Aug 2014 11:02 AM

கோசி ஆற்றில் 24 மணி நேரத்துக்கு வெள்ள அபாயம் இல்லை

கோசி ஆற்றில் அடுத்த 24 மணி நேரத்துக்கு வெள்ள அபாயம் இல்லை என பிஹார் மாநில அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பேரிடர் மேலாண்மை துறை (டிஎம்டி) முதன்மை செயலாளர் வியாஸ்ஜி திங்கள்கிழமை செய்தியாளர் களிடம் கூறியதாவது:

நேபாள அரசிடமிருந்து மத்திய அரசு மூலமாக கிடைத்த தகவலின்படி, நேபாளத்தில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ள சிந்துபஹோக் மாவட்டத்தில் திங்கள்கிழமை மழை பெய்யவில்லை. நிலச்சரிவால் போட் கோசி ஆற்றின் நீரோட்டம் தடைபட்டு அணைபோல தேங்கி உள்ள நீரை வெளியேற்றுவதற்காக குண்டுவெடிப்பும் நடத்தவில்லை. இதனால் அடுத்த 24 மணி நேரத்துக்கு வெள்ள அபாயம் இல்லை.

திங்கள்கிழமை நிலவரப்படி போட் கோசி ஆற்றில் உருவாகி உள்ள செயற்கை அணையின் நீர்மட்டம் மணிக்கு 3 அங்குலம் வீதம் குறைந்து வருவதாக நேபாள தண்ணீர் ஆணைய அறிக்கை கூறுகிறது.

அதேநேரம் அங்கு தேங்கி உள்ள நீரின் ஆழம் குறித்து முரண்பட்ட தகவல் வெளியாகி வருகிறது. முதலில் 80 மீட்டர் ஆழத்துக்கு தண்ணீர் தேங்கி இருப்பதாகக் கூறப்பட்டது.

பின்னர் 40 முதல் 60 மீட்டர் ஆழம் இருக்கலாம் என கூறப்படுகிறது. அப்பகுதிக்கு சென்றுள்ள இந்திய குழுவினர் வான் வழியாக மட்டுமே பார்வையிட்டதால் உண்மை நிலவரம் தெரியவில்லை. ஒருவேளை போட் கோசி ஆற்றில் ஏற்பட்டுள்ள மணல் மேட்டை குண்டு வைத்து தகர்த்தால், அங்கிருந்து வெளியேறும் நீர் பிஹாரின் சுபால் மாவட்டத்தில் உள்ள பிர்புர் அணையை வந்தடைய சுமார் 20 மணி நேரம் ஆகும் என இத்துறை சார்ந்த நிபுணர்கள் கூறியுள்ளனர்.

வெள்ள நிலவரம் தொடர்பாக மாநில அரசு அதிகாரிகள் மத்திய அரசு அதிகாரிகளுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தினர்.

கரையோர மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளிலிருந்து இதுவரை 68,863 பேர் வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான பகுதிகளில் உள்ள 128 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த 1,500 பேர், 500 ராணுவ வீரர்கள், மாநில பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த 400 பேர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முகாம்களில் தங்கி உள்ளவர்களுக்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என வியாஸ்ஜி தெரிவித்தார்.

முதல்வர் ஆலோசனை

இதற்கிடையே பிஹார் முதல்வர் ஜிதன்ராம் மாஞ்சி நிவாரண முகாம்களை ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டார். மேலும் முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து உயர் அதிகாரிகளுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

மத்திய அமைச்சரவை செயலாளர் அஜித் சேத் தலைமையிலான தேசிய நெருக்கடி கால மேலாண்மைக் குழு திங்கள்கிழமை கூடி பிஹார் நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தியது. அம்மாநில தலைமைச் செயலாளர் மற்றும் சில அதிகாரிகளுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் மத்திய அரசு அதிகாரிகள் உரையாடினர்.

நேபாளத்தின் மங்கா கிராமத்தில் சனிக்கிழமை காலை நிலச்சரிவு ஏற்பட்டதில் பிஹாரை நோக்கி வரும் கோசி ஆற்றின் உபநதியான போட் கோசியில் நீரோட்டம் அடைபட்டு செயற்கை அணையாக மாறி உள்ளது.

இந்த மண்மேட்டை அகற்றுவதற்காக நேபாள ராணுவத்தினர் குறைந்த அழுத்தம் கொண்ட வெடிகுண்டுகளை ஞாயிற்றுக்கிழமை வெடிக்கச் செய்தனர். இதனால் கோசி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் உள்ள பிஹாரின் 9 மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. சுமார் 1 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டனர். அப்பகுதியில் பேரிடர் மீட்புக் குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x