Last Updated : 02 May, 2018 08:55 AM

 

Published : 02 May 2018 08:55 AM
Last Updated : 02 May 2018 08:55 AM

தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடாத‌ அதிமுக வேட்பாளர்கள்: கட்சித் தொண்டர்கள் மத்தியில் கடும் அதிருப்தி

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் 3 தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் களத்தில் இறங்கி பிரச்சாரத்தில் ஈடுபடாததால் அக்கட்சி தொண்டர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

கர்நாடக மாநிலத்தில் வருகிற 12-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதால் காங்கிரஸ், பாஜக, மஜத ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் கர்நாடக தேர்தலில் அதிமுக 3 தொகுதிகளில் போட்டியிடும் என அறிவித்தனர். இதையடுத்து மாநிலச் செயலாளர் யுவராஜ், காந்தி நகர் தொகுதியிலும், அன்பு, கோலார் தங்கவயல் தொகுதியிலும், விஷ்ணுகுமார், ஹனூர் தொகுதியிலும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், அதிமுக தலைமைக் கழகம் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்குமாறு மிக தாமதமாக கோரியதால், அந்த சின்னம் ஒதுக்கப்படவில்லை. இதையடுத்து அதிமுக வேட்பாளர்கள் 3 பேருக்கும் இரட்டை மின் கம்பம் சின்னம் ஒதுக்கப்பட்டது. கர்நாடக தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருப்பதால் அரசியல் கட்சியினர் வீதி வீதியாக சென்றும், வீடு வீடாக சென்றும் வாக்கு சேகரித்து வருகின்றனர். ஆனால் அதிமுக வேட்பாளர்கள் இன்னும் பிரச்சாரத்தை தொடங்காதது அக்கட்சி தொண்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

பிரச்சாரம் தொடங்கவில்லை

இது தொடர்பாக அக்கட்சி வட்டாரத்தில் விசாரித்த போது, “அதிமுக மேலிடம் வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்தது மட்டும் தான் எங்களுக்கு தெரியும். 3 வேட்பாளர்களும் வேட்பு மனு தாக்கல் செய்தது, பிரச்சாரத்தை தொடங்கியது தொடர்பாக எங்களுக்கு எதுவும் தெரியவில்லை. அதிமுக ஏற்கெனவே வெற்றிப்பெற்ற தொகுதிகளான காந்தி நகர், கோலார் தங்கவயல் போன்ற வெற்றிவாய்ப்புள்ள தொகுதிகளில் கூட இன்னும் பிரச்சாரத்தை தொடங்கவில்லை.

இன்றைய காலக்கட்டத்தில் அரசியல் கட்சிகள் மின்னணு ஊடகங்கள், அச்சு ஊடகங்கள், விளம்பர நோட்டீஸ், பதாகை, சமூக வலைத்தளம் உள்ளிட்ட பல்வேறு சாதனங்கள் வழியாக பிரச்சாரம் செய்கின்றனர். ஆனால் அதிமுக வேட்பாளர்கள் பிரச்சாரம் தொடர்பாக அக்கறை காட்டாமல் இருக்கின்றனர். இன்னும் சொல்லப் போனால் தொகுதி பக்கமே வராமல் சென்னையில் முகாமிட்டுள்ளனர். இதனால் தொண்டர்களோ காங்கிரஸ், பாஜகவுக்கு தேர்தல் வேலை பார்க்க ஆரம்பித்துவிட்டனர்.

எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் கஷ்டப்பட்டு வளர்த்த கட்சிக்கு வெற்றி வாங்கி தர வேண்டும் என உண்மையான அதிமுக தொண்டர்கள் நினைக்கின்றனர். ஆனால் அதிமுக வேட்பாளர்களோ தேர்தல் குறித்து அக்கறை காட்டாமல் இருக்கின்றனர்.

இதனால் தலைமைக் கழக பேச்சாளர்கள், பிரச்சாரகர்கள், திரைப்பட நடிகர்கள் கூட இன்னும் பிரச்சாரத்துக்கு வராமல் உள்ளனர். இதே நிலை நீடித்தால் அதிமுக 3 தொகுதிகளிலும் டெபாசிட் இழக்க நேரிடும்'' என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x