Last Updated : 05 May, 2018 06:22 PM

 

Published : 05 May 2018 06:22 PM
Last Updated : 05 May 2018 06:22 PM

தேர்தலுக்காக ஜின்னா விவகாரம் எழுப்பப்படுகிறது: வரலாற்று ஆய்வாளர் இர்பான் ஹபீப் பேட்டி

 

தேர்தலுக்காக முகம்மது அலி ஜின்னா விவகாரம் எழுப்பப்படுவதாக உலகப்புகழ் பெற்ற வரலாற்று ஆய்வாளர் இர்பான் ஹபீப் கூறியுள்ளார். பேராசிரியர் இர்பான் ஹபீப், அலிகர் முஸ்லிம் பல்கலைகழகத்தின் வரலாற்றுத் துறையின் முன்னாள் தலைவராகப் பணியாற்றியவர். இடதுசாரி சிந்தனையாளரான ஹபீப், அதே துறையின் தகைசால் (Emeritus) பேராசிரியராக அமர்த்தப்பட்டுள்ளார். உ.பி.யின் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் ஜின்னா பட விவகாரத்தில் ஏற்பட்ட மோதலை ஒட்டி அவர் ‘தி இந்து’விற்கு அளித்த பேட்டி இது.

அலிகர் பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டுள்ள ஜின்னா உருவப்படத்தின் விவாதம் குறித்து உங்கள் கருத்து?

நான் இங்கு மாணவராக இருந்த போதே அவரது படம் மாட்டப்பட்டிருந்தது. லோகமானியர் திலகர் ஒருமுறை சிலவருடங்கள் சிறை சென்றிருந்தார். அடுத்த முறையில், ஆங்கிலேயருக்கு எதிரான ஒரு வழக்கில் எட்டு வருடங்களுக்காக திலகர் சிறை சென்றார். மூன்றாவதாக 1916-ல் திலகர் மீதான மற்றொரு வழக்கிலும் சிறை செல்லும் சூழல் ஏற்பட்டது. இந்த வழக்கில் திலகருக்காக வாதாடிய ஜின்னா அதில் வென்றார். இவ்வாறு, திலகரை சிறை செல்வதில் இருந்து காத்தவரான ஜின்னாவிற்கு எதிராக இவர்கள் (இந்துத்துவாவினர்) பேசுவதன் காரணம் என்ன? இவை அனைத்தும் தேர்தலுக்காக நடைபெறுவதாகவே எனக்கு தெரிகிறது. ஒரு இடத்தில் (கர்நாடகா) தேர்தல் நடைபெறுகிறது. மற்றொரு பெரிய (மக்களவை) தேர்தல் வரவிருக்கிறது.

சுதந்திரப் போராட்டத்தில் ஜின்னா நுழைந்தது எப்படி?

காங்கிரஸின் மூத்த தலைவரும் வழக்கறிஞருமான கோபாலகிருஷ்ண கோகலேவின் உதவியாளராக இருந்தவர் ஜின்னா. வழக்கறிஞரான ஜின்னாவை காங்கிரஸில் கோகலே அழைத்து வந்தார். கோகலே கூறியதன் பேரில் ஜின்னா மத்திய சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

சுதந்திரப் போராட்டத்தில் ஜின்னாவின் முக்கியப் பங்கு என்ன?

1916 ஆம் ஆண்டு காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் லீக்கின் இடையே கோகலே முன் இருந்து ஒரு உடன்படிக்கை ஏற்படுத்தினார். அதில் ஜின்னாவின் பங்கு மிகவும் முக்கியமாக இருந்தது. இதைத் தொடர்ந்து பல வருடங்களாக காங்கிரஸ்-முஸ்லிம் லீக்கின் ஆலோசனைக் கூட்டங்கள் ஒன்றாக நடைபெற்றன. பிறகு 1990-ல் வந்த ரவுலட் சட்டத்தில் பத்திரிகையாளர்கள் உட்பட எவரையும் சிறையில் அடைக்கும் அதிகாரம் அளித்து அமலாக்கப்பட்டது. இதை எதிர்த்த மத்திய சட்டப்பேரவையின் 20 உறுப்பினர்களில் ஒருவராக ஜின்னா முக்கியப் பங்கு வகித்தார்.

இதன் எதிர்ப்பு போராட்டத்தில் ஜின்னா, ‘நான் முதலாவதாக இந்தியன், இரண்டாவதாகவும் இந்தியன், கடைசியாகவும் இந்தியன்..’ எனக் கூறிய வார்த்தைகள் மிகவும் புகழ்பெற்றது. இதுவன்றி, சைமன் கமிஷனை எதிர்த்துப் போராடினார். 1919-ல் ஆட்சி முறையில் இந்தியர்களுக்கும் பங்களிக்க வேண்டி ‘ஹோம் ரூல் லீக்’முறை அமலாக்கியதற்கு காங்கிரஸுடன் சேர்ந்து ஜின்னாவும் அளித்தார்.

காங்கிரஸ்-முஸ்லிம் லீக் இருவரும் இணைந்து ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடும் போது அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது எப்படி?

ஆங்கிலேயர்கள் முஸ்லிம்களுக்காக தனியாக வாக்குரிமையை அறிமுகப்படுத்தினர். அதை எதிர்த்த ஜின்னா, அனைவருடனும் இணைந்து முஸ்லிம்களும் வாக்களிப்பர். ஆனால், முஸ்லிம்களுக்கு மத்திய சட்டப்பேரவையில் 33 சதவகித ஒதுக்கீடு மட்டும் அளிக்க வேண்டும் என வலியுறுத்தினார். காங்கிரஸ் 28 சதவிதம் ஒதுக்கீடு அளிக்க முன்வந்தது. மகாத்மா காந்தி நடுநிலை வகித்தார். அந்தப் பிரச்சினை காலப்போக்கில் தங்களுக்குள் சரியாகி விடும் எனக் காந்தி கருதினார்.

இந்தப் பிரச்சனையில் இருதரப்பினுள் முதன்முறையாகக் கருத்து வேறுபாடு தொடங்கியது. இந்து மகாசபையினர் தங்களுக்காக சிந்து மகாணத்தை தனியாக பிரித்தளிக்க வலியுறுத்தினர். 1940-ல் லாகூர் ஒப்பந்தம் ஏற்பட்டது. எனினும், அப்போது ’பாகிஸ்தான்’ என்ற ஒரு வார்த்தை எங்கும் எழவில்லை.

தம் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக ஜின்னா ஆங்கிலேயருக்கு ஆதரவளித்தாரா?

எப்போதும் இல்லை. ஜின்னாவைத் தவறானவர் எனக் கூறலாமே தவிர அவர் ஆங்கிலேயருக்கு எப்போதும் ஆதரவளிக்கவில்லை. சர்வார்கரைப் போல் ஜின்னா ஆங்கிலேயரிடம் மன்னிப்பும் கேட்டதில்லை. ராஷ்டிரிய ஸ்வயம் சேவக்கினரும் (ஆர்எஸ்எஸ்) ஆங்கிலேயருக்கு எப்போதும் மறுப்பு தெரிவித்ததில்லை. தமது தொண்டர்களின் அணிவகுப்பு செய்யக் கோரிய அனுமதிக்கு ஆங்கிலேயேர் மறுத்ததை ஏற்றனர். போலீஸாரும் அணிவதால் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் காக்கி நிறச் சட்டை அணியக்கூடாது என்ற உத்தரவையும் ஏற்றுக்கொண்டனர்.

ஜின்னா அலிகர் பல்கலைக்கு வந்தது எப்போது?

அலிகர் முஸ்லிம் பல்கலைகழக மாணவர் பேரவை சார்பில் ஜின்னாவிற்கு வாழ்நாள் உறுப்பினர் பதவி அளிக்கப்பட்ட போது 1938-ல் வந்திருந்தார். அதன் பிறகு 1942-43ல் பல்கலையில் பெரிய கொண்டாட்டம் நடைபெற்றது. அதற்கு வந்திருந்த ஜின்னாவை வாகன ஊர்தியில் அமரவைத்து மாணவர்கள் அவரைப் பல்கலைக்கழகம் வரை இழுத்து வந்தனர்.

இவ்வாறு இர்பான் ஹபீப் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x